Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாடு முதல்வர் தான் எனக்கு ரோல் மாடல் - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு முதல்வர் தான் எனக்கு ரோல் மாடல் – அமைச்சர் செந்தில் பாலாஜி

-

தன் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் புறம் தள்ளிவிட்டு 50 ஆண்டு காலம் மக்களுக்காக உழைத்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் எனது ரோல் மாடல் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் உள்ள தனியார் அரங்கில் இந்திய தொழில் கூட்டமைப்பின் மாணவர் அமைப்பான “யங் இந்தியன்ஸ்” அமைப்பின் நான்காம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தமிழக முதல்வரின் 50 ஆண்டுகால உழைப்பை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அவர் குறித்து சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தாலும், அவற்றையெல்லாம் புறம்தள்ளி விட்டு உழைப்பு, உழைப்பு என்றே செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் முதல்வர் கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை பல்வேறு மாநில அரசுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்து வெற்றி பெறுகிறார்கள். அந்த அளவிற்கு நமது திட்டங்களும், செயல்பாடுகளும் உள்ளன.

குறிப்பாக சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்திற்கு தமிழக முதல்வர் என்னை நேரடியாக சென்று பணியாற்ற கூறினார். ஆய்வுக்கு அனுப்பி வைத்ததோடு மட்டுமின்றி முழுமையாக கவனம் செலுத்தி பணிகளை விரைவாக செய்திடும் வகையில் தொடர்ந்து கண்காணித்தார். அதனால் தான் மற்ற துறைகளுக்கு முன்பாக மின்துறை மிக விரைவாக செயல்பட முடிந்தது. அதுபோல இளம் தலைமுறையினர் தங்களுக்கு முன் உதாரணமாக சில நபர்களை எடுத்துக் கொள்ள வேண்டும். என்னை பொருத்தவரை தமிழக முதல்வர் தான் எனது ரோல் மாடல் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி;

ஆண்டு முழுவதும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் படிப்பிற்காக வெளிநாடு செல்கின்றனர். செய்தித்தாள்களும், ஊடகங்களும் அது குறித்து எல்லாம் பேசுவதில்லை. ஆனால் ஒரு நபரைப் பற்றி மட்டும் திரும்பத் திரும்ப செய்தி வெளியிடுகின்றனர். ஒன்றிய அரசு தேர்வு செய்து அனுப்பிய நபர்களில் 11-பேரில் அண்ணாமலை ஒருவர். அவ்வளவுதான். இதற்கு ஏன் இவ்வளவு விளம்பரம்.

மேலும் முதல்வர் – அதானி சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை என்று முழுமையான அறிக்கை விடுத்தும் அதை முழுமையாக படித்து புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத அறிவுத்திறனற்றவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அதானி குழுமத்திடம் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக மின்சாரத்துறை எந்த ஒப்பந்தமும் செய்துக் கொள்ளவில்லை என்று முழுமையான அறிக்கை கொடுத்திருந்தோம். அந்த அறிக்கையை படித்த பிறகும் சிலர், விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

ஒன்று அறிக்கையை முழுவதும் படித்து புரிந்து கொள்ள வேண்டும். அல்லது பிறரிடம் கேட்டு அதை தெரிந்து கொள்ளவேண்டும். படித்தும் புரியாமல், பிறரிடம் கேட்டும் புரிந்து கொள்ள பக்குவம் இல்லாத அறிவுத்திறன் அற்றவர்களாக இருக்கிறார்கள் என அதானி – முதல்வர் சந்திப்பு குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்தவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

MUST READ