மஹாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் திகிலோடு நாட்கள் நகர்ந்து வருகின்றன. யார் முதல்வராக பதவியேற்பது? அமைச்சர் இலாகா ஒதுக்கீட்டில் பிடிவாதம், அமைச்சர் பதவி கிடைக்காமல் போனவர்களின் அதிருப்தி என மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது மகாயுதி கூட்டணி. அந்த வகையில் இப்போது ஒரு சம்பவத்தால் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அஜித் பவார் மீது கோபத்தில் இருக்கும் சகன் புஜ்பால், மகாயுதி கூட்டணிக்கட்சியான பாஜகவில் சேரப் போகிறார். அவர் பாஜகவில் இணைந்தாலும் பெரிய நெருக்கடி எதுவும் இருக்காது.
ஏனெனில் அஜித் பவாரின் என்சிபி-பாஜக இரண்டும் ஒரே கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளே. பாஜகவில் இணைந்த பிறகு அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. சகன் புஜ்பால் பாஜகவில் இணைவதாக அறிவிக்கலாம். காலையில் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்த அவர் சற்று நேரத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப் போவதால் அவர் பாஜகவில் சேருவார் என்ற ஆருடங்கள் வலுத்துள்ளன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சகன் புஜ்பால் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவது குறித்து அவர் முக்கிய முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. காலையிலேயே தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்துள்ளார்.
ஷகன் புஜ்பால் சரத் பவாருக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டவர். சரத் பவாரிடம் இருந்து அஜித் பவார் பிரிந்த பிறகு, சகன் புஜ்பால் அஜித் பவாருடன் இணைந்தார். சகன் புஜ்பலுக்கும் அஜித் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. மகாராஷ்டிராவில் அமைச்சர் பதவியேற்பேன் என்று உறுதியாக இருந்தபோதிலும், அஜித் பவாரின் என்சிபி அவருக்கு வாய்ப்பு கொடுக்காததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.
அஜித் பவார் மீது நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் சகன் புஜ்பால். சமீபத்தில் கூட, அவர் அஜித் பவாரை கடுமையாக சாடினார். அஜித் பவார் மீதும் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சமீபத்தில் சட்டசபை கூட்டத்தை நடத்திய அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அரசியல் முடிவு எடுப்பதாக அறிவித்தார். இப்போது அவர் வெளிப்படையாக அஜித் பவாருக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளார்.
நேற்றே, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓபிசி அமைப்புகளின் பிரதிநிதிகள் சாகன் புஜ்பாலைச் சந்தித்தனர். புதிய மகாயுதி கூட்டணி அரசில் இடம்பெறாததால் புஜ்பால் கோபத்தில் உள்ளார். நாசிக் மாவட்டத்தில் உள்ள யோலா தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் முன்னாள் அமைச்சரும் கூட. சனிக்கிழமை நாக்பூரில் நடைபெற்ற மாநில சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரைத் தவிர்த்துவிட்டு நாசிக் புறப்பட்டுச் சென்று விட்டார்.
மஹாயுதி கூட்டணி அரசில் 39 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓபிசி தலைவர்கள் மும்பையில் ஒரு கூட்டத்தை நடத்தியதாகவும், பின்னர் அவர்களை சந்தித்ததாகவும் புஜ்பால் கூறியுள்ளார். சகன் புஜ்பால் இது குறித்து கூறுகையில், ‘‘ஓபிசி தலைவர்கள் நான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கு ஆச்சரியம் தெரிவித்தனர். நான் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதை அவர்கள் ஆதரிப்பார்கள்’ என்று தெரிவித்தார். சகன் புஜ்பாலின் இந்த முடிவு மஹாராஷ்டிர அரசியலலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புஜ்பாலின் இந்த முடிவால் பாஜக பெரும் உற்சாகத்தில் இருக்கிறது.