நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி டிசம்பர் முதல் வாரத்தில் சீனா செல்கிறார். பிரதமராக பதவியேற்ற அவர் இருதரப்பு பயணமாக சீனா செல்வது இதுவே முடல் முறை. இந்தியாவுக்கு வருவதற்குப் பதிலாக சீனாவுக்கு ஓலி செல்வது விந்தையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை, நேபாள பிரதமர் தனது முதல் இருதரப்பு பயணத்தை இந்தியாவிற்கு மட்டுமே மேற்கொள்வது பாரம்பரியமாக இருந்து வந்திருக்கிறது.
பாரம்பரியத்தை மீறுவது நேபாளத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான உறவைப் பாதிக்குமா? என்பதற்கு பதிலளித்த நேபாளத்தின் மூத்த பாதுகாப்பு, வெளியுறவு செய்தியாளர் பரசுராம் கஃப்லே, ‘‘நேபாளம், இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுடனும் சிறந்த உறவைப் பேண வேண்டும். இந்தியாவுடன் சில பிரச்சினைகள் இருந்தால் அவை தீர்க்கப்பட வேண்டும். இந்தியாவுடன் சுமூகமான உறவை ஏற்படுத்த இந்த அரசு முயற்சிக்கவில்லை, அதைச் செய்ய வேண்டும் என்றார்.
எங்களுக்கும், இந்திய மக்களுக்கும் இடையே பரஸ்பர உறவு உள்ளது. அதன் முக்கியத்துவத்தை நமது அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று கஃப்லே தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் முன்பு, பிரதமர் ஓலி, நேபாளத்தில் நடந்த ஒரு மாநாட்டில், இந்தியாவுக்குப் பதிலாக சீனா முதலில் செல்வதால் இந்தியாவுடனான நமது உறவுகள் எதிர்மறையாக பாதிக்கப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. இந்தியா செல்ல மாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை’’ என்று ஒலி கூறினார்.
நேபாளத்தில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழகத்தின் நேபாள மற்றும் ஆசிய வரலாற்று மையத்தின் நிர்வாக இயக்குனர் மிருகேந்திர பகதூர் கார்க்கி, ‘‘காத்மாண்டுவில் அரசியல், அறிவுசார் வட்டாரங்களில் இரண்டு விதமாக பேசப்படுகின்றன. முதலில் ஓலி இந்தியா செல்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், இந்தியாவில் இருந்து அழைப்பு வரவில்லை.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேபாள பயணம் குறித்து இந்தியாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. மோடியின் வருகைக்காக நேபாளம் காத்திருந்தது. சீனாவின் தலைமையும் ஒலியை அழைப்பதில் ஆர்வம் காட்டியது’’என்கிறார்.
நேபாள பிரதமர் சீனாவுக்குச் செல்வதால், இந்தியாவுடனான உறவில் ஏற்படும் தாக்கம், அதற்கு இந்தியா எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் பொறுத்து இருக்கும் என்று நேபாள மக்கள் நம்புகின்றனர்.