2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்ட அறிவிப்பு.
வருகிற 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட அதிமுக தற்போது கூடுதல் வாக்கு சதவீதம் பெற்றுள்ளதாக புள்ளி விவரத்துடன் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஊடகங்களில் அதிமுக குறித்து பல்வேறு விவாதம் நடக்கிறது. எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆதரித்து பாரதப் பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 8 முறை வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள், தேசிய தலைவர் நட்டா, அமித்ஷா பலமுறை தமிழகத்திற்கு வந்து சென்றார்.
பல மத்திய அமைச்சர்களும் வந்து பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி பெரியவர் ராமதாஸ் அவர்களும், அன்புமணி ராமதாஸ் அவர்களும், கூட்டணியில் அங்கம் வகித்த பல்வேறு தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர்.
திமுக பொருத்தவரை ஸ்டாலின் அவர்கள் , அவர்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாக்குகள் சேகரித்தார்.
கூட்டணியில் அங்கம் வசித்த காங்கிரஸ் கட்சியும் பிரச்சாரம் செய்தது.
ராகுல் காந்தியும் பிரச்சாரம் செய்தார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளனும் பிரச்சாரம் செய்தார்.
கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். கொங்குநாடு கட்சித் தலைவர், வைகோ போன்றவர்களும் பிரச்சாரம் செய்தனர். ஆனால்
அதிமுகவில் நான் ஒருவன் தான் பிரச்சாரம் செய்தேன். கூட்டணியிலிருந்து தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா பிரச்சாரம் செய்தார். இவ்வளவிற்கும் இடையில் அதிமுக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, தற்போது ஒரு சதவீதம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாகும்.
2024 தேர்தலில் அதிகமான வாக்குகள் பெற்றிருக்கிறோம். இதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து விட்டதாக செய்திகள் வருகிறது. தேர்தலில் BJP கூட்டணி அதிக வாக்குகள் பெற்றதாக கூறுவது தவறான செய்தி. பாஜக கடந்த தேர்தலில் 18.80 சதவீதம் வாக்குகளை பெற்றது. ஆனால் இந்த 2024ல் 18.28 சதவீதம் வாக்குகள் பெற்று. 0.62 சதவீதம் குறைவாக பெற்றுள்ளது. ஆனால் அதிகம் பெற்றதாக தவறான செய்தியை பரப்பி வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.
அதேபோல திமுக 2019 ல் 33.52 சதவீதம் வாக்குகள் பெற்றது. ஆனால்
இந்த தேர்தலில் 26.93 சதவீதம் வாக்குகள் பெற்று உள்ளது. திமுகவின் வாக்கு சதவீதம் 6.59 சதவீதம் குறைந்திருக்கிறது.
அதேபோல திமுக கூட்டணி கடந்த தேர்தலில் 53.29% வாக்குகளை பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் 46.97 சதவீதம் மட்டுமே வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறைவாகவே திமுக கூட்டணி வாக்குகளை பெற்றுள்ளது.
ஆனால் அதிமுக தான் கூடுதல் வாக்குகள் பெற்றிருக்கிறது .
பாரதிய ஜனதா குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறது. திமுகவும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறது என்றார். தென் மாவட்டங்களில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளதே? என்ற கேள்விக்கு தற்போது நடந்தது நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தேர்தலாகும். எனவே அதிமுக வளர்ந்து தான் வருகிறது என்றார்.
அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்கு தக்கவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை. திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
சசிகலா, ஓபிஎஸ் ஆகிய இருவரும் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று கூறியுள்ளனரே? அது முடிந்து போன கதை. வேண்டும் என்றே குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களெல்லாம் பிரிந்து சென்றதால், ஒரு சில இடங்களில் கூடுதலாக வாக்குகள் கிடைத்து இருக்கிறது.
சட்டமன்ற தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. மக்கள் பிரித்துப் பார்த்து தான் வாக்களிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் விழிப்புடன் உள்ளனர். எந்த சமயத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என கருதி வாக்களிக்கிறார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.
கோவையில் அண்ணாமலை குறைவான வாக்குகள் தான் வாங்கி உள்ளார். ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும், சட்டமன்ற தேர்தல் என்றாலும் வாக்கு வித்தியாசம் மாறி மாறி தான் வரும். சூழ்நிலைக்கு தக்கவாறு மக்கள் வாக்களிக்கிறார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரித்தார். தொடர்ந்து கூறிய அவர், நான் ஏற்கனவே முதலமைச்சராக ஆன போது, மூன்று மாதம் இருப்பாரா? நான்கு மாதம் இருப்பாரா? என்றார்கள். ஆனால் நான்காண்டு இரண்டு மாதம் சிறப்பான ஆட்சி தந்தோம்.
அதிமுக தலைவர் காலத்திலும் சரி, ஜெயலலிதா அவர்களின் காலத்திலும் சரி, தொடர்ந்து தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வந்தோம். வெற்றி வரும்வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதால்தான் தனித்துப் போட்டியிட்டோம். ஆட்சி அதிகாரம் வேண்டுமென்று நினைத்திருந்தால் தேசிய கட்சியுடன் நாங்கள் சேர்ந்து இருப்போம்.
தமிழ்நாட்டு உரிமையை காத்திட வேண்டும். தமிழ்நாட்டு உரிமைகள் பறி போகும் போது தடுக்கவும், நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயல்படவும் அதிமுக இந்த முடிவை எடுத்தது.
திமுக கூட்டணி உறுப்பினர்கள் என்ன சாதிப்பார்கள் என பார்க்கத்தானே போகிறோம் என்றார். பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு செல்வீர்களா? என்று கேட்டதற்கு அதை பற்றி இன்னும் சிந்திக்கவில்லை என்றார்.
ஜெயக்குமார் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேராது எனக் கூறியிருக்கிறாரே,
கூட்டணியில் சேராதென ஏற்கனவே பேட்டி அளித்த வீடியோவை காண்பித்த எடப்பாடி பழனிசாமி, முன்பே நாங்கள் இது குறித்து தெரிவித்துவிட்டோம். அதைப் பற்றி தான் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி இல்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் தேர்தலை சந்திப்போம். வெற்றி பெறுவோம் என்றார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் கழகத் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் எங்களுடன் கூட்டணி அமைத்து அந்த கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகள் அதிமுக அதிகம் பெற்றிருக்கிறது. எனவே இதன் மூலம் அவதூறு பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார்.