ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சாசனத்துக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் எதிரானது என்று நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு திமுக உறுப்பினர் பி.வில்சன் கடிதம் எழுதியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சன், செல்வகணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றை குழுவின் தலைவர் பி.பி. சௌத்திரியிடம் வில்சன் எம்.பி. வழங்கினார். அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சாசனத்துக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் எதிரானது என்று திமுக உறுதியாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
எனவே இந்த மசோதா தொடர்பாக நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் விரிவான முறையில் கேட்கப்பட வேண்டும். கருத்துக்களை தெரிவிக்க அனைவருக்கும் போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த எந்த அடிப்படையில் முன்னாள் குடியரசு தலைவர் தலைமையிலான உயர்மட்ட குழு பரிந்துரை வழங்கியது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் நாடாளுமன்ற கூட்டு குழுவில் ஒப்படைத்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் திமுக வலியுறுத்தி உள்ளது.
யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமைகளைப் பறிப்பதா? – வைகோ கண்டனம்