தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஆரம்ப கட்டத்தில் திராவிட சித்தாந்தங்களையும், பெரியாரின் கொள்கைகளையும் பரப்பி தனது முதல் அரசியல் அத்தியாத்தை தொடங்கினார். பின்னர், விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தமிழ் தேசியத்தை கையில் எடுத்து கடந்த 2016ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களில் மக்களுடன்தான் கூட்டணி என அறிவித்து தொடர்ந்து அரசியல் களத்தில் பயணித்து வருகிறார்.
அக்கட்சியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50 சதவீதம் பெண்கள், படித்தவர்களுக்கு முக்கியத்துவம் என போன்ற அறிவிப்புகள் முதன்மையாக பார்க்கப்பட்டன. ஆனால், அண்மைகாலமாக, நாம் தமிழர் கட்சியில் இருக்கும் முக்கிய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி வருவது தொடர்கதையாக உள்ளன.
“குறிப்பாக, கட்சி தலைமையின் செயல்பாடுகள் சரியில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, சீமான் செல்வது தான் சரி இல்லையென்றால் கட்சியை விட்டு போய் விடுங்கள்” போன்ற குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக நிர்வாகிகளால் முன்வைக்கப்படுகின்றன. மேலும், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தனது கட்சியின் அடையாள முகமாக வைத்து செல்லும் இடம் எல்லாம் பல கதைகளை சுவாரசியமாக பேசி வந்தார்.
இந்நிலையில் 10 நிமிடம் மட்டுமே தலைவர் பிரபாகரனை சீமான் பார்த்து பேசினார் என நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவி காளியம்மாள் போட்டுடைத்துள்ளார். “அவ்ளோ தான் சீமானை முடிச்சு விட்டுட்டீங்க போங்க” என காளியம்மாள் பேசிய விடியோவை சமூக வலைதளத்தில் வரலாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னை, அண்ணாநகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 70-வது பிறந்தநாளையொட்டி தமிழர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது. அப்போது மேடையில் பேசிய காளியம்மாள் ‘‘இலங்கைக்கு சீமான் படம் எடுக்த்தான் சென்றிருந்தார். ஆனால், சீமான் வெறும் படம் மட்டும் எடுக்க போய் இருந்தால் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசிய தலைவராக நமக்குள் புகுத்தப்பட்டிருக்க மாட்டார் என்பது எனக்கும் சிமானுக்கும்தான் தெரியும். பல போராளிகளுக்கும் தெரியும். அவர்கள் சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் ஒவ்வொருவரும் ஒன்றை செல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
10 நிமிடம் பேசியவனிடம் தான் ‘பிரபாகரன் உன்னை நம்பி விட்டு செல்கிறேன்’’ என கூறியிருப்பாரா என்ன? அதெல்லாம் இல்லை. இலங்கை சென்று பிரபாகரனிடம் சீமான் பேசிய 10 நிமிட பேச்சுதான் இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு காரணமாக உள்ளது. அதுதான் அவரது அரசியலை நிலைப்பெற செய்யக்கூடிய மையப்புள்ளியாக இருந்துள்ளது. ஆனால், அவரது கனவு இன்றளவும் நிலை பெறாமல் உள்ளது” என்றார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து அவருடன் ஆமைக்கறி சாப்பிட்டது, ஏ.கே.64 ரக துப்பாக்கியில் புலிகளிடம் பயிற்சி அளிக்கப்பட்டது என சீமான் கூறிய ஒட்டு மொத்த கதைகளும், கூட்டத்தில் கட்டு சோத்தை அவிழ்த்தது போல காளியம்மாள் போட்டு உடைத்து விட்டார். இதனால், “சீமான் இவ்வளவு நாள் நம்மிடம் சொன்னது எல்லாம் கட்டு கதைகள் தானா..? உண்மை இல்லையா… சீமான் அண்ணே நம்மள முடிச்சு விட்டீங்க போங்க..” என நாம் தமி ழர் கட்சியின் நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சீமான், ‘‘அங்கு என்ன நடந்தது என்பதை கூற முடியாத நிலை உள்ளது. இந்த சந்திப்பின் போதுகூட எங்களுக்கு என்ன பணி என அண்ணனிடம் (பிரபாகரன்) கேட்கும் போது நீங்கள் உங்கள் தாயகத்திற்கு போய் இறங்குங்கள். என்ன செய்ய வேண்டும் என தெரிந்து விடும். நீங்கள் செய்யுங்கள் என்றார். இறங்கினேன், தெரிந்தது. செய்தேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.