வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் நாங்கள் போட்டியிடுவோம்- பன்னீர்செல்வம்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் நாங்கள் போட்டியிடுவோம், தேர்தலில் போட்டியிட்டு நாம் யாரென்று நிரூபிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஹாலில் ஓ.பி.எஸ் -அணியின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,அவரின் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம்,ஜேசிடி பிரபாகரன்,சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன்,வைத்தி லிங்கம்,ஐயப்பன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த கட்சி சட்ட விதிகளை எடப்பாடி பழனிச்சாமி மதிக்கவில்லை. எங்கள் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாடு தமிழகத்தை மட்டுமின்றி டெல்லியையே திருப்பி பார்க்க வைத்தது. நம் பக்கம் நியாயம் உள்ளதால் தமிழக மக்கள் நம் கட்சியினை நம்புகிறார்கள். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு பகுதியிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அந்த பணி இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிக்க தொண்டர்கள் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
ஒவ்வொரு பகுதியில் இருக்கும் உறுப்பினர் பெயர் பட்டியல் முழு விவரங்களை விரைவில் எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் தேர்தலில் யாரை நிற்க வைக்க வேண்டும் என தெரியும்.இந்த பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி இரண்டு கோடி தொண்டர்களை சேர்த்துள்ளார் என்று கூறுகிறார். அவை அனைத்தும் பொய்யான தகவல். தற்போது பத்திரிக்கையாளர்கள் மத்தியில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் போட்டி இடுவோமா ? இல்லையா? என்று பேசுகிறார்கள். ஆனால் கண்டிப்பாக நாம் போட்டியிடுகிறோம்.
மதுரையில் நடைபெற்ற மாநாடு, அம்மா இருந்திருந்தால் அதை பொதுக்கூட்டம் அளவிற்கு தான் இருந்திருக்கும். அந்த மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட உணவு முழுவதும் அழுகி போனதாக உள்ளது. எடப்பாடி பொதுச் செயலாளர் பதவிக்கு வந்த பிறகு போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் தோல்வி அடைந்து தான் வருகிறார். வீட்டில் குவித்து வைத்திருக்கும் பணம் உன்னை காப்பாற்றாது. நாங்கள் திருச்சியில் நடத்திய மாநாட்டின் கூட்டத்தை விட அரைப்பங்கு கூட இந்த மதுரை மாநாடு நடைபெறவில்லை.
காஞ்சிபுரத்தில் இருந்து சுற்று பயணம் தொடங்க காரணம் தமிழ்நாட்டின் முன்னாள் தலைநகரம் காஞ்சிபுரம். அதனால் தான் நாங்கள் காஞ்சிபுரத்திலிருந்து பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். காஞ்சிபுரம் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்று பயணம் முடிந்த பிறகு தான் உண்மையான மாநில மாநாடு நடைபெறும். இன்று மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த புரட்சி தமிழர் என்ற பட்டம் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மதுரை மாநாடு முற்றிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமியின் வேஷம் கலைந்து விட்டது” என்றார்.