இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும் செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையான பயன்களைத் தரும் என்பதை உறுதி செய்கிறேன்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களையும் சார்ந்த மக்கள் சட்டமன்றத் தேர்தலின்போது முன்வைத்த முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றும் நிகழ்வாக, மக்களின் நெஞ்சில் பால் வார்க்கும் நிகழ்வாக அமைந்தது. தமிழ்நாடு வீட்டு வசதித் திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்ட பகுதிகளில், அதற்கான விலக்களிக்கும் ஆணைகள் கிடைக்கப் பெறாமல் இருந்தவர்கள் தங்களின் நீண்டகால பரிதவிப்பை மனுக்களாக அளித்து வந்தனர். அவர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த உங்களில் ஒருவனான நான், முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சிறப்புப் புகார் பெட்டிகள் அமைத்து, மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுத்திட, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து, 4-10-2024 அன்று உரிய அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதுமிருந்தும் கோரிக்கை வைத்த மக்களுக்குப் பெரும் நிம்மதி ஏற்படும் வகையிலான இந்த அரசாணையின்படி, கோவை மாவட்டம் வடக்கு வட்டத்திலும், தெற்கு வட்டத்திலும் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, 5,386 குடும்பங்கள் பயனடையும் வாய்ப்பு உருவானது. தங்களுக்குரிய நிலத்தை விற்கவும் வாங்கவும் முடியாமல் பல ஆண்டுகளாகத் தவித்த மக்களுக்குத் திராவிட மாடல் அரசு வழங்கிய நிம்மதிப் பரிசுதான் இந்த நில எடுப்பு விலக்களிப்பு ஆணை. அதனை வழங்குகிற விழாவில் துறையின் அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்களும் பங்கேற்று, எவ்வளவு அக்கறையுடன் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து, உரிய சட்டமுறைகளின்படி நிறைவேற்றினோம் என்பதை விளக்கினார். விலக்களிப்பு ஆணைகளைப் பெற்றுக் கொண்ட மக்களின் நன்றி அவர்களின் கண்களில் துளிர்த்ததைக் கண்டேன். நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும் செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையான பயன்களைத் தரும் என்பதை உறுதி செய்கிறேன்.
கோவையில் தொடங்கினேன்! தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன்!