எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனத்திற்காக அதிமுக சார்பில் அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் பேச்சு தரக்குறைவாகவும் பழனிசாமியை அசிங்கப்படுத்தும் வகையிலும், அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.
பொது அமைதி சீர்குலைக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து அவதூறாக பேசி வரும் அண்ணாமலை மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் சரவணன் புகார் அளித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் கெட்ட எண்ணத்துடனும், பொது அமைதியை சீரகுலைக்கும் வகையிலும் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் என குறிபிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆகிய இரு தேர்தலிலும் தமிழகத்தில் அதிமுக – பாஜக 4 ஆண்டுகள் கூட்டணி அமைத்து எதிர்கொண்டது.
இந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுக- பாஜக கூட்டணி தோல்வியை தழுவியது. பின்னர் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலையின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியை முறித்தது அதிமுக. பொய் மட்டுமே பேசுபவர் அண்ணாமலை, எப்படியோ தலைவர் பதவி கிடைத்துவிட்டது. ரொம்ப ஆட்டம் ஆடுகிறார் என்று எடப்பாடி விமர்சித்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை எவரோ ஒருவரின் காலில் தவழ்ந்து பதவியைப் பிடித்த தற்குறி எடப்பாடி பழனிசாமி அப்படிபட்டவர் என்னைப் பற்றி பேச தகுதி இல்லையென காட்டமாக விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுத்து நாற்காலியை காப்பாற்றிய எடப்பாடி பழனி சாமி என்னைப்பற்றி பேசக்கூடாது என பொதுக்கூட்ட மேடையில் பேசியிருந்தார். இந்தநிலையில் அண்ணாமலையின் பேச்சிற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது.
தொடர்ந்து அவதூறாக பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக சார்பாக மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.