தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க புதிய குழு ஒன்றை அமைக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை 3 கட்டங்களாக 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் 25 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கக்கூடிய நிலையில் ஒட்டுமொத்தமாக 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன் பிறகு அந்த மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க புதிய குழு ஒன்றினை அமைக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
தனக்கு ஆதரவான பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களை நியமித்ததாக புஸ்ஸி ஆனந்த் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையிலான அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 120 அமைப்பு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பதவி வழங்கிய பிறகு சில மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்களாகவே தங்களை பாவித்து கொண்டு எல்லை மீறுவதாக புகார் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அதே போல வட்டம், ஒன்றியம், அணி சார்ந்த மாவட்ட பொறுப்புகளுக்கு மாவட்ட செயலாளர்கள் பணம் பெற்றுக் கொண்டும், சாதி ரீதியாக மையப்படுத்தி இந்த பொறுப்புகளை வழங்குவதாகவும் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் புகார் எழுந்துள்ளது.
நிர்வாகிகள் தலைமைக்கு தங்களது அதிருப்திகளை தெரிவித்து வருகிறார்கள். அங்கே எது போன்ற சாதிய பிரச்சனைகள் இருக்கிறது. பாகுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா? பிற கட்சி நிர்வாகிகளிடம் தவெகவின் கட்சி விபரங்களை பகிர்ந்து கொள்கிறார்களா? இதுபோன்ற விஷயங்களை எல்லாம் கண்காணிப்பதற்காகவும், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சரியாக களப்பணியாற்றுகிறார்களா? என்பதை எல்லாம் ஒட்டுமொத்தமாக கண்காணிக்க இந்த குழு அமைக்கப்பட உள்ளது.
இந்த குழுவில் கட்சியினுடைய பொருளாளர் வெங்கட்ராமன், ஆதவ் அர்ஜுனா இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 7 முதல் 8 நபர்கள் கொண்ட இந்த குழு தமிழக வெற்றி கழகத்தினுடைய மாவட்ட செயலாளர்களை கண்காணிப்பார்கள்.சமீப காலங்களாகவே கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஒட்டப்படுகிற வால்போஸ்டர், பத்திரிகை விளம்பரங்களில் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுடைய புகைப்படங்கள் மாற்றப்பட்டு அஞ்சலை அம்மாள், வேலுநாச்சியார் ஆகியோருக்கு பதிலாக அப்துல் கலாம் புகைப்படம் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது போன்ற சர்ச்சைகளை தவிர்ப்பதையும் இந்தக் குழு கண்காணிக்கும் என்றும் கூறப்படுகிறது.