மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளான இன்று ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மும்பையில், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியால் அதானிக்கு பெரிய திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது’’எனத் தெரிவித்த அவர், ‘‘யார் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி?’’என்கிற பதாகையை உயர்த்திக் காட்டினார். தாராவியின் எதிர்காலம் பாதுகாப்பாக இல்லை. ஒருவருக்காக ( அதானி) தாராவி அழிக்கப்படுகிறது.
கவனத்தை திசை திருப்புவதில் பாஜகவினர் நிபுணர்கள். அவர்கள் பிரச்சினை அரசியலை விரும்புகிறார். மகாராஷ்டிராவில் இருந்து 8 பெரிய தொழில் நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து 5 லட்சம் இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதானியின் டெண்டர் ரத்து செய்யப்படும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேவுடன் நான் முழுமையாக இருக்கிறேன். தாராவியின் மறுசீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒருவருக்கு நன்மை செய்யவே இது நடக்கிறது. இதை நடக்க விடமாட்டோம்.
யார் பாதுகாப்பானவர்கள்? என்றால் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் அதானியை பாதுக்கிறார்கள். அதனால், நஷ்டம் மகாராஷ்டிர மக்களுக்கும், தாராவி மக்களுக்கும்தான். மகாராஷ்டிரா தேர்தல் ஏழைகளுக்கும், சில கோடீஸ்வரர்களுக்கும் இடையிலான தேர்தல். கோடீஸ்வரர்கள் மும்பையில் நிலத்தை பெற அடைய துடிக்கிறார்கள். ஒரு கோடீஸ்வரருக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி கொடுக்க தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் விவசாயிகள், ஏழைகள், வேலையில்லாதவர்களுக்கு உதவுவதே காங்கிரஸ் கட்சியின் சிந்தனை. பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகள்.
நாங்கள் விரும்பும் அரசு அமைந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி கிடைக்கும். விவசாயிகளின் ரூ.3 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சோயாபீன் குவிண்டால் ரூ.7,000க்கு கொள்முதல் செய்யப்படும். வெங்காய விவசாயிகளுக்கு நியாய விலைக் குழு அமைக்கப்படும். பருத்திக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைக்கும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி விரும்பவில்லை. அது நாடு முழுவதும் கணக்கிடப்பட வேண்டும். மகாராஷ்டிராவில் எங்கள் அரசு அமைந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மாநிலத்தில் உள்ள வேலையில்லாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4000 உதவித்தொகையுடன் ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். 2.5 லட்சம் அரசு வேலைகளை உருவாக்குவோம்’’ என ராகுல் காந்தி தெரிவித்தார்.