உலக பணக்காரர்கள் பட்டியலில் 600-வது இடத்திற்கு மேல் இருந்த அதானி, எவ்வாறு இரண்டாவது இடத்திற்கு வந்தார்? என, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
லட்சத்தீவு எம்.பி.யின் தகுதி நீக்கம், ரத்து செய்யப்பட்டது போல, ராகுல் காந்தியின் தகுதி நீக்கமும் திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகளை காங்கிரஸ் சட்ட வல்லுநர்கள் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாகவும், அது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஸ்ரீ வெல்ல பிரசாத் ஆகியோருடன் பேட்டியளித்த முகுல்,
அதானி நிறுவனம் 20 ஆயிரம் கோடி போலி நிறுவங்களில் முதலீடு செய்துள்ளது என புகார் தெரிவித்தார். அந்த பணம் யாருடையது ? அந்த பணத்தை சீனாவை சேர்ந்த நபர் ஏன் தர வேண்டும்?? அதானிக்கும் பிரதமருக்கும் என்ன தொடர்பு??? அதானியின் விமானத்தில் பிரதமர் ஏன் ஓய்வெடுக்க வேண்டும் என, அடுக்கடுக்கான வினாக்களை அவர் எழுப்பினார்.
அதானியின் விமானத்தில் பிரதமர் இருந்த படங்களை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார் என்றும் அதில் இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு அதானி மூலம் ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுத்துள்ள ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியன் ஸ்டேட் வங்கியின் தலைவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் அமர்ந்திருக்கிறார் என்றும் முகுல் வாஸ்னிக் கூறினார்.
உலக பணக்காரர்களின் எண்ணிக்கையில் 600-வது இடத்தில் இருந்த அதானி, எவ்வாறு 2-வது இடத்திற்கு வந்தார், என முகுல் வினவினார்.
பின்னர் ராகுல் காந்தியின் கேள்விகள் அரசை அதிர வைத்தன என்றும்
அதனால் தான் அவதூறு வழக்கு தூசி தட்டப்பட்டு, தற்போது இந்த தண்டனையானது வழங்கப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் அண்மையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை மக்களவை செயலகம் திரும்ப பெற்றுள்ளது போல, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தையும் திரும்பப் பெறுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அது குறித்து காங்கிரஸ் சட்ட வல்லுநர்கள் ஆலோசித்து வருவதாகவும் அடுத்தடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் முகுல் வாஸ்னிக் பதிலளித்தார்.