ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில் அவருக்கு இந்த தண்டனை பெற்று தந்திருப்பதாக பாஜக மீது திமுக எம் பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு “அலைபோல் உழைப்பு மலை போல் உயர்வு புகழரங்கம்” நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான சேகர் பாபு முன்னிலை வகித்தார்.
இதில் மாநிலங்கள் அவை உறுப்பினர் திருச்சி சிவா கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பாலபாரதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சி மற்றும் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் நிகழ்த்திய சாதனைகள் குறித்து மக்களிடையே விளக்கி பேசினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய திருச்சி சிவா கூறுகையில், லலித் மோடி, நீரவ் மோடி என்பவர்களை பற்றி ராகுல் காந்தி பேசியது தன்னை பாதிக்கிறது என்பதால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இரண்டாண்டு சிறை தண்டனை அளித்துள்ளது.
இந்த ஜனநாயக நாட்டில் ஒருவரை விமர்சித்து பேசினால் வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இரண்டாண்டு தண்டனை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் ராகுல் காந்திக்கு உள்ளது. ஆனால் அது சரியானதா தவறானதா என்பது தான் முக்கியம்.
உணர்ச்சி பூர்வமான பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் நடக்கவில்லை என்பது கேள்விக்குறி தான். இன்றைய பிரதமர் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் அவைக்கே வருவதில்லை என குற்றச்சாட்டினார்.
ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில் அவருக்கு இந்த தண்டனை பெற்று தந்த பாஜக. அது அவருக்கு பாதகம் அல்ல சாதகம் தான் என கூறிய அவர், இதுவரை அவரை பற்றி பேசாதவர்கள் கூட இன்று மாலை அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர் என குறிப்பிட்டார் திருச்சி சிவா.