சென்னை ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆவடி மாநகராட்சி பகுதியில் கலைஞர் நகர், பட்டாபிராம், வசந்தம் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகிய பகுதிகளில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது. டெண்டர் விட்டும் நீண்ட நாட்கள் கழித்து கடந்த பருவ மழை காலத்தில் தான் கால்வாய் பணியை தொடங்கினார்கள். ஓராண்டிற்கு மேல் நடைபெற்று வரும் இந்தப் பணி தற்போது 50 சதவீதம் அளவிற்கே முடிந்திருக்கிறது.
மேலும் கால்வாய் பணி நிறைவடைந்து உள்ள மழைநீர் கால்வாயில் குப்பைகள், மற்றும் சகதிகள் அடைத்து கொண்டு இருப்பதால் பருவ மழையின் போது பொதுமக்கள் மீண்டும் இன்னல்களை அனுபவிப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆவடி வீட்டுவசதி வாரியத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கே கடந்த ஆட்சியில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. ஆனால் கால்வாய் மேல் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு மணி நேரம் மழை பெய்தாலும் மக்கள் பெரும் துயரத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் 42வது வார்டில் தனியார் பள்ளி அருகில் திறந்த வெளி கால்வாய் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. அதனை சரி செய்யும்படி பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர் தரணிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆவடி வசந்தம் நகரில் மழைநீர் கால்வாய் ஒவ்வொரு தெரு முனையிலும் பாதி பணியுடன் நிறுத்தியுள்ளனர். மழைநீர் செல்ல வழியில்லாமல் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவுவதற்கு காரணமாக இருந்து வருவதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆவடி பொதிகை நகரில் திறந்த நிலை கால்வாய் இருப்பதால் மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கொள்வதாக மணி என்பவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கால்வாய் பணியை வேகமாக முடித்து தரும்படி வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த அன்பு என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.