Homeசெய்திகள்அரசியல்தொகுதி மறுவறை செய்தால் மத்திய -மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும்: செல்வ பெருந்தகை எச்சரிக்கை

தொகுதி மறுவறை செய்தால் மத்திய -மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும்: செல்வ பெருந்தகை எச்சரிக்கை

-

- Advertisement -

பா.ஜ.க., தொகுதி மறுவரையறை பிரச்சினையில் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ளவில்லை. எனவே, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 543 இடங்களில் எண்ணிக்கையை கூட்டக் கூடாது. அப்படி கூட்டப்ட்டாள் மத்திய – மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும் என எச்சரிக்கிறேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

தொகுதி மறுவறை செய்தால் மத்திய -மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும்: செல்வ பெருந்தகை எச்சரிக்கை

மேலும் தனது அறிக்கையில் பின்வருமாறு, ” உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கி 18 முறை மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு, ஜனநாயகம் செழுமைப்படுத்தப்பட்டு வருகிறது. 1951, 1961, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்களவை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டது. அடுத்த தொகுதி மறுவரையறையின்படி, மக்களவையில் 1971 இல் 543 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டது.

1976 இல் 42-வது அரசமைப்புச் சட்ட திருத்தத்தின்படி அடுத்த தொகுதி மறுவரையறையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்தார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் மாநிலங்களின் ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல, 2001 இல் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களும் இன்னும் 25 ஆண்டுகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்வதை தள்ளி வைத்தார். இந்த முடிவும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துகிற மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் தான் எடுக்கப்பட்டது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு, 2021 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதற்கு கொரோனா பாதிப்பு காரணம் எனக் கூறப்பட்டது. தற்போது 2026 இல் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்ய வேண்டுமென பா.ஜ.க. திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. சமீபத்தில் கோவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதி மறுவரையறை செய்வதால் தமிழகத்தின் எண்ணிக்கை குறையாது எனக் கூறினார். ஆனால், எந்தெந்த மாநிலங்களுக்கு தொகுதி கூடுகிறது என்பதைப் பற்றி தெளிவாக கூறவில்லை.

இதன்மூலம், பா.ஜ.க., தொகுதி மறுவரையறை பிரச்சினையில் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ளவில்லை. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதன் காரணமாகத் தான், தமிழ்நாடு முதலமைச்சர் 58 கட்சிகள் அடங்கிய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, தொகுதி மறுவரையறையை இன்னும் 30 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த காலங்களில் மக்கள் தொகை பெருக்கத்தை, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு திறம்பட கட்டுப்படுத்திய மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவத்தை குறைத்து தண்டிக்கப்படுகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாகப் பின்பற்றியதால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. மொத்த பிறப்பு விகிதம் வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் குறைவாகவே இருந்தது. தற்போதைய சூத்திரத்தின் கீழ் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், 2029 தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் கடுமையான சரிவை சந்திக்க நேரிடும். இந்த மாநிலங்களின் மக்கள் தொகை தொடர்ந்து சுருங்கிக் கொண்டு வருகிற அதேநேரத்தில், இந்தி பேசும் மாநிலங்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென்னந்தியாவில் மக்களவை இடங்களின் பங்கு தற்போது 25 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறையக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய தேர்தல் அமைப்பு முறையில் ஒரு தொகுதியில் அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக கருதப்படுகிறார். பெரும்பாலான வாக்காளர்கள் மற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருந்தாலும், எடுத்துக்காட்டாக, 2019 பொதுத் தேர்தலில் பா.ஜ.க., 303 இடங்களில் வெற்றி பெற்று 37.4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று 56 சதவிகித இடங்களை கைப்பற்றி விட்டது. மற்ற கட்சிகள் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தாலும் அவைகளின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. இத்தகைய நடைமுறை தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் குரல் ஒடுக்கப்பட்டு கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைத்து வருகிறது.

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் இந்தியா கூட்டணியின் நிலை என்ன ? காங்கிரசின் நிலை என்ன ? என்று பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கேள்விக் கணைகளை தொடுத்து வந்தார்கள். ஆனால், நேற்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ஊடக பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் காங்கிரசின் நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார். தற்போது மக்களவையில் மாநிலங்களுக்கான இடங்கள் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வழங்கப்படுகிறன. பிப்ரவரி 2002 முதல் திருத்தப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவு 2026-க்கு பிறகு, முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இடங்களை மறுபகிர்வு செய்வதற்கான வழிவகைகளை வழங்குகிறது.

2019 இல் மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜேமி ஹின்ட்சன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின்படி 2026 இல் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கான இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த ஆய்வின்படி இடங்களை இழக்கும் மாநிலங்கள் தமிழ்நாடு 8, கேரளா 8, ஆந்திரா மற்றும் தெலுங்கானா 8, ஒடிசா 3, மேற்கு வங்கம் 4, கர்நாடகா 2, இமாச்சல பிரதேசம் 1, பஞ்சாப் 1 மற்றும் உத்தரகாண்ட் 1 ஆகும். இடங்களை கூடுதலாக பெறும் மாநிலங்கள் உத்தரபிரதேசம் 11, பீகார் 10, ராஜஸ்தான் 6, மத்தியபிரதேசம் 4, ஜார்க்கண்ட் 1, அரியானா 1, குஜராத் 1, தில்லி 1 மற்றும் சத்தீஸ்கர் 1 ஆகும். இதன்படி, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்காக தண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 543 இடங்களில் எண்ணிக்கையை கூட்டக் கூடாது. அப்படி கூட்டப்படாமல் இருந்தால் தான் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் ஏற்படுகிற நியாயமற்ற ஏற்றத் தாழ்வுகளை தவிர்க்க முடியும். இல்லையென்றுச் சொன்னால் வடக்கு, தெற்கு என்றும், இந்தி பேசுகிற மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என்றும் பிளவு ஏற்பட்டு தேசிய ஒருமைப்பாடு சீர்குலைக்கப்படும். இதை பா.ஜ.க. உணரவில்லை என்றால், இந்தியாவில் ஜனநாயகத்திற்கு பேரழிவு ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். 75 ஆண்டுகளாக அரசமைப்புச் சட்டம் நீதிமன்றங்களின் மூலமாக பாதுகாக்கப்பட்ட மத்திய – மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும் என எச்சரிக்கிறேன்” என கூறியுள்ளாா்.

மத்திய அரசுக்கு பாடம் புகட்டிய தமிழக அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தரமான சம்பவம்..!

MUST READ