அண்ணாமலைக்கு ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும்- ஆர்.எஸ்.பாரதி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை திமுகவினர் மீது அவதூறாக புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டார். அண்ணாமலை தெரிவித்த அவதூறு கருத்துகளை திரும்ப பெற்று மன்னிப்பு கோர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி ஒரு மாத காலம் அவகாசம் அளித்தும் எந்தவித விளக்கமும், மன்னிப்பும் கேட்காததால் அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதம் அவகாசம் அளித்தும் வக்கீல் நோட்டீஸ்க்கு அண்ணாமலை பதில் அளிக்கவில்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும்.திமுக யார் மீதும் பொய் வழக்கு போட்டதில்லை. திமுக தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளது வரலாறு. ஏற்கனவே கலைஞர் பொருளாளராக இருந்த போது 60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாத்திகம் பத்திரிகை ஆசிரியர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து ஒராண்டு சிறை தண்டனை பெற்றுத் தந்தார். அதே போன்று தற்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்துள்ள வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை சிறை செல்வார்.” என்றார்.
முன்னதாக கடந்த மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், கனிமொழிக்கு ரூ.830.33 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார், இதேபோல் அண்ணாமலை மீது திமுக எம்.பி. டி.ஆர்பாலு வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.