‘திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்குத்தான் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார் நடிகர் விஜய்’ எனவும், ‘திமுகவின் ‘பி’ டீம்தான் தவெக’ எனவும் நேற்று கடுமையாக பேசியிருந்தார் அண்ணாமலை. இந்நிலையில்தான் விஜய்யுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையை ரகசியமாக எடப்பாடி பழனிசாமி தொடங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இது பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரத்தினர் இதுகுறித்து, ”2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப்பெரிய தேர்வு என்று தான் சொல்ல வேண்டும். 2016 இல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகவும் கட்சியின் பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார்.
ஆனால் அதற்குப் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. பத்து தோல்வியில் பழனிச்சாமி என திமுகவும் அவரை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கட்சியில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், ஆகியோர் சென்று விட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது செங்கோட்டையனையும் சமாதானப்படுத்தி ஆயிற்று.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த ஆர்வத்தோடு எதிர்நோக்கி காத்திருக்கிறார். திமுக மீதான அதிருப்தி, கூட்டணி கட்சி பலம் உள்ளிட்டவற்றை கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தேர்தலை சந்தித்து முதல்வரானவர் என்ற பெருமையை எடப்பாடி பழனிச்சாமி பெறுவார். ஓ.பன்னீர்செல்வத்தை பொருத்தவரை ஜெயலலிதா பதவியில் இல்லாத போது இடைக்கால ஏற்பாடாகவே முதல்வர் ஆனவர்.
தானும் அப்படித்தான் பதவி ஏற்றவர் என்றாலும் மக்களை சந்தித்து வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்ற கனவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது. அதே நேரத்தில் எதிர் அணியில் இருக்கும் திமுகவோ அசுர பலத்துடன் இருக்கிறது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அங்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இதனால் 2026 சட்டமன்ற தேர்தல் கடும் போட்டி அளிக்கும் வகையில் இருக்கும்.
தற்போது அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ. தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகள் இருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான பாமக, பாஜக கூட்டணியில் இருக்கிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற அதிமுக வாக்கு வங்கி மட்டுமே போதாது. பொதுவான வாக்குகளும், திமுக எதிர்ப்பு வாக்குகளும், கூட்டணி கட்சி வாக்குகளும் அதிமுக-வுக்கு நிச்சயம் தேவை.
வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமகவை கூட்டணிக்குள் இழுக்க மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதே நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக அதிமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் தேமுதிக-வை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி முயன்று வருகிறார். மேலும் தமிழக அரசியலில் புதிய வரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் அதிமுக கூட்டணியில் கொண்டுவர எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்து வருகிறார். அந்த வகையில் அதிமுக, பாமக, தேமுதிக, தமிழக வெற்றி கழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட சில கட்சிகள் அதிமுக அணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சியுடன் கூட கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறார்’’ என்றனர்.
அதே சமயம் ஒரு பக்கம் திமுக- கூட்டணியை உடைக்கவும், மறுபக்கம் அதிமுக பலமான கூட்டணி அமைத்துவிடக் கூடாது என்பதிலும் பாஜக கவனமாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.