அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: செல்லூர் ராஜூ
அதிமுகவின் அவைத்தலைவராக ஒரு இஸ்லாமியரை எடப்பாடி பழனிசாமி அமர வைத்துள்ளார். அதேபோல, சனாதனம் பேசுகின்ற உதயநிதி ஸ்டாலின் திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை வர விடுவாரா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. பாஜகவோடு கூட்டணி தொடர்கிறது. அண்ணாமலை இப்படி பேசுகிறாரே என்ற வருத்தத்தையே பதிவு செய்தோம். வேறு எதுவும் இல்லை. மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதை நாங்கள் சொல்கிறோம். அதேபோல் எடப்பாடி பழனிசாமிதான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என்று பாஜக அறிவிக்க வேண்டும். அண்ணாமலை நடைபயணம் செல்லட்டும். கட்சியை வளர்க்கட்டும். அதில் எங்களுக்கு கவலை இல்லை. அண்ணாமலை யாத்திரையை வசூல் யாத்திரை என சி.வி.சண்முகம் கூறிய நிலையில், யாத்திரையை எந்தக் குறையும் சொல்லவில்லை. அதிமுகவின் அவைத்தலைவராக ஒரு இஸ்லாமியரை எடப்பாடி பழனிசாமி அமர வைத்துள்ளார். அதேபோல, சனாதனம் பேசுகின்ற உதயநிதி ஸ்டாலின் திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை வர விடுவாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்த 2 நாட்களில் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். பாஜக சார்பில் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படாத நிலையில் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.