விஜயுடன் ஒரே மேடையில் கலந்து கொண்டால் குழப்பம் வரும் என்பதால் வி.சி.க தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விஜய் மாநாட்டில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக்கட்சிகளுக்கும் பங்கு எனத் தெரிவித்து இருந்தார். உடனடியாக விசிக கட்சியின் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளப்பதிவில் விஜயின் அறிவிப்புக்கு வரவேற்புத் தெரிவித்து இருந்தது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருமாவளவன், விஜயின் அரசியல் கொள்கைகளை அரைவேக்காட்டுத்தனம் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
அடுத்து அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் திருமாவளவன் கலந்து கொள்ள இருக்கிறார் என அடுத்த பரபரப்பை கொளுத்திப்போட்டனர். இதனையடுத்து முன்பைவிட, திமுகவைவிட இன்னும் கடுமையாக எதிர்த்துப் பேசி விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை என மறுத்தார் திருமா. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பது கடந்த ஆண்டே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. விஜயுடன் கலந்து கொள்வதை அரசியல் ஆக்க வேண்டாம் எனத் தெரிவித்து இருந்தார். https://x.com/arulmozhi_25/status/1859429670531572046
இந்த நிலையில் தற்போது ’எல்லோருக்கும் ஆன தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்றும் விஜய் கலந்து கொள்வதால் கூட்டணியில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தப்பட்டதால் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ள வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக பேசப்படுகிறது.
இதுகுறித்து யூடியூபர் சவுக்கு சங்கர் இதுகுறித்து, ‘‘விகடன் நிறுவனம் வரும் டிசம்பர் 6 நடத்த இருக்கும், “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே கலந்துகொள்ள ஒப்புதல் கொடுத்திருந்த திருமாவளவன், தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வதால், தனது முடிவை மறுபரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் ‘இந்த நேரத்தில் நீங்கள் விஜய்யோடு கலந்துகொண்டால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும்’என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, டிசம்பர் 6 நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.
அம்பேத்கர் நூலை வெளியிடாமல், அரசியல் காரணங்களுக்காக திருமாவளவன் புறக்கணிப்பது, அம்பேத்கருக்கு செய்யும் அவமானம். அவர் கூறியது போல, ஒரு வருடத்துக்கு முன்பு அவர் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி. முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டால், அதற்காக இந்நிகழ்ச்சியை புறக்கணிப்பதோடு, தன் கட்சியின் எதிர்காலத்தையும் காவு கொடுத்திருக்கிறார் திருமா.
திருமாவளவன் தலித் மக்களுக்காகவும், அவர்கள் நலனுக்காகவும் கட்சி நடத்துகிறாரா, முக ஸ்டாலின் குடும்ப நலனுக்காக கட்சி நடத்துகிறாரா என்பது, திருமாவின் முடிவின் மூலம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. நான் திருமாவளவன் மீது முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டேன். இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை. வருத்தங்கள்.’’ எனக் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள யூடியூபர் அருள்மொழிவர்மன், ‘‘ராஜ்நாத் சிங் கலைஞர் நாணயத்தை வெளியிடலாம். கூட்டணி கட்சிகள் நிராகரிக்கும் போது திமுக மட்டும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கலாம். கேலோ இந்தியாவுக்கு மோடியை அழைக்கலாம். அதானியை ரகசியமாக இங்கு ஆளும் தரப்பு சந்திக்கலாம். ஆனால், நேற்று கட்சி துவங்கிய விஜய் திமுகவை சில வார்த்தைகளில் சீண்டியதற்காக பொது அடையாளமான அம்பேத்கர் தொடர்பான விழாவை கூட்டணியை காரணம் காட்டி புறக்கணித்தால் கொண்ட கொள்கையிலும், எடுத்த முடிவிலும் திடமாக இருக்க முடியாதவரா டாக்டர். திருமா என்ற பேச்சு எழும்.
விஜய்யுடன் மேடையை பகிர்ந்தால் கூட்டணிக்குள் குழப்பம் வரும் என்றால் அந்த அளவிற்கா கூட்டணிக்குள் முதிர்ச்சியும், பக்குவமும், புரிதலும் இருக்கிறது? டாக்டர். திருமா அண்ணலுக்காக பங்கெடுத்து அங்கேயே அண்ணலை பற்றி பாடம் எடுத்து கூட்டணியில் வழக்கம்போல தொடர்வது தான் அவரது ஆளுமைக்கு அழகு. என்ன செய்யப் போகிறார் டாக்டர். திருமா?’’எனத் தெரிவித்துள்ளார்.