இளையராஜா இசையில் உருவான “திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி” நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து இளையராஜா ஆண்டாள் ரங்கமன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயிலில் நின்றவாறு இளையராஜா சாமி தரிசனம் செய்தார். இது பெரும் சர்ச்சையானது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்துக்குள் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கும் வழக்கமில்லை என்று கோயில் செயல் அலுவலர் விளக்கம் அளித்தார். ‘‘தன்னை மையமாக வைத்து சிலர் வதந்தியை பரப்புவதாக’’ இளையராஜா தெரிவித்து விட்டார்.
இந்நிலையில், ‘‘இந்தியச் திருநாட்டின் பிரதமராக இருந்தாலும், தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும், உலக அரங்கில் இசை ஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதி இல்லை. சனாதனம் தலைவிரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போது மலரும்’’ என இயக்குநர் அமீர் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள இயக்குநர் பேரரசு, ‘‘நடக்காத ஒரு நிகழ்வுக்கு பதிவு போடுவது தேவை இல்லாத ஒன்று! அமீர் இஸ்லாத்தில் பற்று உள்ளவர். இஸ்லாத்தில் எத்தனையோ குறை இருக்கும். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பள்ளிவாசலில் சமத்துவத்திற்கு போராடி வீரத்தை காட்டுங்கள். பின் சனாதானத்தைப் பற்றி பேசலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.