மத்திய அரசில் அமைச்சராக வாய்ப்பு இருப்பதாகவும், அதை தான் நிராகரித்ததாகவும் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே. மாநிலத்தில் எந்த பதவியும் எனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர், ‘‘எனக்கு பதவி ஆசை இல்லை. தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், ஓய்வெடுப்பதற்காக கிராமத்திற்குச் சென்றுள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளார்.
தானேயில் இருந்து ஏக்நாத் ஷிண்டே மும்பை செல்லாததால் திங்கள்கிழமை மகாயுதி கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஷிண்டே இன்னும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர் தானேவில் ஓய்வெடுப்பார் என்று கூறப்படுகிறது. இன்று மகாராஷ்டிராவின் புதிய அமைச்சரவை தொடர்பான மகாயுதியின் உத்தேச கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏக்நாத் ஷிண்டேவின் உடல் நலக்குறைவு காரணமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மஹாயுதியின் கூட்டணியைச் சேர்ந்த அஜித் பவார் தனது கட்சி எம்பி சுனில் தட்கரேவுடன் மும்பை சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற தலைவர்களுடன் கலந்துரையாடுவார். ஷிண்டே, பாஜக இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் என்சிபி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தங்கள் தலைவர்களை டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று சிவசேனா கூறுகிறது. ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகத் தயாராக இல்லை. ஆனால் உள்துறை அமைச்சர் போன்ற பெரிய இலகாவை அவர் கேட்டு வருகிறார்.
ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே தனது எக்ஸ் தளப்பதிவில்,புதிய ஆட்சி அமைப்பது குறித்த புதிரை சிக்கலாக்கி உள்ளார். தான் துணை முதல்வராகும் யூகங்களை நிராகரித்தார். மகா கூட்டணி அரசின் பதவியேற்பு விழா சற்று தாமதமாகி வருவதாகவும், பல விவாதங்கள், வதந்திகள் நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ‘‘நான் துணை முதல்வர் ஆவேன் என்ற கேள்விக்குறியுடன் கடந்த இரண்டு நாட்களாக இந்த செய்தி வெளியாகி வருகிறது. ஆனால், அதில் உண்மை இல்லை. எனது துணை முதல்வர் பதவி தொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகும் மத்திய அரசில் அமைச்சராகும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், கட்சி மற்றும் அமைப்புக்காகப் பணியாற்ற விரும்பி அதை நிராகரித்ததாகவும்’’ ஸ்ரீகாந்த் ஷிண்டே தெரிவித்தார்.