தனித்து நின்று நாங்கள் மீண்டும் வெல்வோம். எத்தனை கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து எங்களை எதிர்கொண்டாலும் இனி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வரமுடியாது என அமைச்சர் ரோஜா கூறினார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு பயிற்சி முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கேட்டு லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் தங்களுக்கு நியாயம் வேண்டும், சந்திரபாபுவுக்கு ஜாமீன் தரவேண்டும் எனக்கூறியும் ஆளும் ஜெகன்மோகன் அரசை கண்டித்தும் நேற்று முன்தினம் மாலை மாநிலம் முழுவதும் சத்தம் எழுப்பும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி சந்திரபாபு குடும்பத்தினர் வீடுகளின் மாடியில் நின்றபடி ஒலி எழுப்பி சத்தமிட்டனர். மாநிலம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் தங்கள் வீட்டு மாடிகள், வீட்டு வளாகம் ஆகியவற்றில் நின்று சத்தமிட்டனர்.
இந்நிலையில் திருப்பதியில் நேற்று முன்தினம் மாநில அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது: சந்திரபாபு நாயுடு குற்றம் செய்திருப்பதால்தான் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை விசாரித்துள்ளது. ரூ.114 கோடியை போலி நிறுவனங்கள் மூலமாக சந்திரபாபு நாயுடு பெற்றது தெரிய வந்துள்ளது. அதன்பின்னரே சிஐடி போலீசார் விசாரித்து அவரை கைது செய்துள்ளனர். வீடுகள் தோறும் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் நியாயம் கேட்பதாக கூறி சத்தம் எழுப்பினர். அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடுவின் கபட நாடகம் எடுபடாது. தனது மாமனாரான என்.டி.ராமாராவுக்கு துரோகம் செய்துவிட்டு ஆட்சியை பறித்தவர் சந்திரபாபு. எனவே அவர்கள் என்னதான் சத்தம் போட்டாலும் சரி, ஒப்பாரி வைத்து அழுதாலும் சரி, சந்திரபாபு நாயுடு இனி ஆட்சிக்கு வரமுடியாது. குறிப்பாக அவர் எத்தனை கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தாலும், தலைகீழாக நின்றாலும்கூட ஆட்சிக்கு வரமுடியாது. வரும் தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை பிடித்து ஜெகன்மோகன் ரெட்டி 2வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்வார். இவ்வாறு அவர் கூறினார்.