இந்திய நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாகக் கடத்தப்பட்ட 11 ஆயிரத்து 311 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பிடிபட்டுள்ளன. இதில், குஜராத் மாநிலத்தில் மட்டும் 7 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, குஜராத் போதையை முதலில் ஒழியுங்கள் என்கிற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், ”2026ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி தமிழ்நாட்டில் வருமாம், வந்ததும் போதையை ஒழிக்கப் போகிறாராம். இந்திய நாட்டின் இப்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி இருக்கிறார்.
2026 வரைக்கும் அவர் சும்மா ஏன் இருக்க வேண்டும்? போதை அதிகமாக உள்ள குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குப் போய் ஒழிக்கலாமே? இரண்டு நாட்களுக்கு முன் சொல்லப்பட்ட தகவல்தான் இது.
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட 11 ஆயிரத்து 311 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பிடிபட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத் துறைமுகங்களில் சிக்கியவை என்ற தகவல் வந்துள்ளது. இது உள்துறை அமைச்சருக்குத் தெரியாதா? அவர் அங்கே தானே முதலில் போக வேண்டும்.
“கடந்த ஐந்து ஆண்டுகளில் துறைமுகங்களில் போதைப் பொருள் பறிமுதல் அதிகரித்துள்ளதா” என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருந்தார். துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு மற்றும் அவற்றின் மதிப்பு குறித்தும், துறைமுகங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

“இந்திய நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாகக் கடத்தப்பட்ட 11 ஆயிரத்து 311 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பிடிபட்டுள்ளன. இதில், குஜராத் மாநிலத்தில் மட்டும் 7 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்து 118 கோடி போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று சொல்லி இருக்கிறார். இதைச் சொல்பவர், அமித்ஷா துறையின் இணை அமைச்சர் தான். சந்தேகம் இருந்தால் அவரையே போய் கேட்கவும்.
இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள துறைமுகங்கள் வழியாக அதிக அளவில் போதைப்பொருள்கள் கடத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது. இரண்டுமே பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள். அதுவும் குஜராத் என்பது பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் தந்த மாநிலம். அங்கே போதை நடமாட்டம் இவ்வளவு இருக்கலாமா? இது யாருக்கு அவமானம்? பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அல்லவா?
நாடு முழுவதும் 5 ஆண்டுகளில் ரூ.11,311 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? இது யாருடைய நிர்வாகத்தில் விழுந்த ஓட்டை?
‘நாட்டிலேயே அதிகமாக போதைப் பொருள் விற்பனையாகும் மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் தான்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மாநிலங்களவையில் கொடுக்கப்பட்ட அறிக்கையில் இது இருக்கிறது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் ராஜஸ்தானில்தான் அதிகமான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது பா.ஜ.க. ஆளும் மாநிலம் ஆகும்.
ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர், குஜராத், அரியானா, பீகார், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் – ஆகிய பத்து மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏழு மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும், கூட்டணியில் இருக்கும் மாநிலங்கள். இதைப் பற்றி விவாதம் நடத்தத் தயாரா உள்துறை அமைச்சர்?
குஜராத் மாநிலம், முழு மதுவிலக்கு மாநிலம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அங்கு மதுவே இல்லையா? 2006–ஆம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது; முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ‘Vibrant Gujarat’ என்கிற திட்டத்தின் அடிப்படையில் மதுவிலக்குச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் குஜராத்தில் மது அருந்தத் தடை எதுவும் இல்லை. குஜராத்தில் சட்டவிரோதமாகப் புழங்கும் மதுவுக்கு எதிராகப் போராடி வரும் மீனா படேல், “குஜராத்தில் சட்ட விரோத மதுவிற்பனை மிகப் பெரிய வணிகமாக உருவெடுத்துள்ளது. பத்து மடங்கு இங்கு விலை அதிகம்” என்று சொல்லி இருக்கிறார். சட்டவிரோத மது அருந்தி உயிரிழப்புகள் நடக்கின்றன. எரிசாராயம் கைப்பற்றப்படுவதும் நடக்கிறது. ‘போன் செய்தால் போதும் மது வீடி தேடி வரும் மாநிலம் குஜராத்’ என்று ஊடகங்கள் எழுதின.
கடந்த 2023 ஆம் ஆண்டு குஜராத் மாநில அரசு போட்ட சட்டத்தின் படி ‘கிஃப்ட் சிட்டி’ என்ற பகுதியில் மது அருந்துவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. 2023 தேர்தலின் போது மட்டும் 23 கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் குஜராத் மாநிலத்தில் கைப்பற்றப்பட்டன.
2024ஆம் ஆண்டுக்கான குஜராத் மாநில காவல் துறை அறிக்கைப்படி அம்மாநிலம் முழுவதும் ரூ.144 கோடி மதிப்புள்ள 82 லட்சம் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டவையே இந்த அளவு என்றால், தயார் ஆனவை எவ்வளவு இருக்கும்? மதுவிலக்கு நடைமுறையில் உள்ள குஜராத் மாநிலத்தின் நிலைமை இது. பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முதலில் ஒழியுங்கள்” என கூறப்பட்டுள்ளது.