டிடி தமிழ் தொலைக்காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அமதிக்கப்பட்ட விவகாரம், தமிழ் மொழி, திராவிடத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடகவே தெரிகிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி திணிப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில்தான் சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி இந்தி மாதம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. நேற்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு விட்டு பாடினர்.
இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்பதற்கே பல தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அவமதிக்கும விதமாக தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியதால் திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்தன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப்பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும் என்றும், சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர் என்றும் காட்டமாக விமர்சித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை மத்திய அரசு திணிப்பதாக குற்றம்சாட்டினார்.
எதிர்ப்பு வலுத்ததை அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் நிகழ்ந்த குளறுபடிக்கு மன்னிப்பு கோரிய டிடி தமிழ் தொலைக்காட்சி, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளித்தது. மேலும், முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒவ்வொரு விழாவிலும் தான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் முதலமைச்சருக்கு நன்றாகத் தெரியும் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இதனிடையே, அண்மையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வாசகத்தில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் திருநாடும் என்ற வாசகம் மாற்றிப் பாடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு திராவிட இயக்கத்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வாசகம் ஒரு அரசியல் கட்சியினர் மாற்றம் செய்து பாடியுள்ள நிலையில், நாட்டை ஆளும் பாஜகவோ அந்த வரியையை விட்டுவிட்டே பாடியுள்ளனர். தமிழ் மொழி மீதும், திராவிட இனத்தின் மீதான வெறுப்பினை வெளிக்காட்டும் விவதமாகவே இவர்கள் இந்த செயலில் ஈடுபடுவதும், அரசியலமைப்பு சட்டத்தை மீறி பாடலை திருத்தும் செயலில் ஈடுபட்டுள்ளதும் இதனால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.