காங்கிரஸ் குடும்பத்தில் பாஜக விசுவாசியாக மாறிய தமிழிசை
பாஜக மாநில மருத்துவ அணியின் பொதுச்செயலாளர், மருத்துவ அணியின் அகில இந்திய இணை ஒருங்கிணைப்பாளர், பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர், பாஜக மாநில தலைவர் என படிப்படியாக பல்வேறு பதவிகளை கடந்து இன்று ஆளுநர் பொறுப்பை அலங்கரித்துள்ள தமிழிசை, காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழிசையின் திருமணம், தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளான எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோரின் தலைமையில்தான் அரங்கேறியது. இப்படி அரசியல் தலைவருக்கு மகளாக பிறந்து, தலைவர்களுடனே பயணித்ததால் என்னவோ தமிழிசைக்கு குழந்தை காலம் முதலே அரசியல் மீது அலாதி பிரியம். ஆகவே தந்தையிடம் சென்று காங்கிரஸில் இணைந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவரது தந்தையோ அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். காரணம் வாரிசு அரசியலுக்கு வழி வகுத்துவிடக்கூடாது என்பதே. அந்த காலத்தில் பாஜக தமிழகத்தில் எட்டிப்பார்க்க தமிழிசைக்கு வாஜ்பாயின் மீது ஈர்ப்பு வந்து, அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொள்ள வழி வகுத்தது.
1999 ஆம் ஆண்டு தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி பாஜகவில் இணைந்தார் தமிழிசை. இதனால் கடும் கோபத்தில் இருந்த குமரி ஆனந்தன், தமிழிசையிடம் பல ஆண்டுகள் பேசவில்லை என அவருடன் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தாலும், மக்களுக்கு நன்கு பரிச்சையமாகி இருந்தாலும், தேர்தல் அரசியல் தமிழிசைக்கு கைக்கொடுக்கவில்லை. சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் இதுவரை ஐந்துமுறை வரை போட்டியிட்ட தமிழிசை, ஒருமுறை கூட வெற்றிபெற்றதில்லை. இருந்தாலும் அதற்காக அவர் மனம் தளர்ந்ததும் இல்லை.
பத்திரிக்கையாளர்களின் அதிரடி கேள்விகளுக்கும், எதிர்க்கட்சியினரின் விளாசல்களுக்கும், இளைஞர்களின் விமர்சனத்திற்கும், நெட்டிசன்களின் மீம்ஸ்களுக்கும் சற்றும் அசாராத சிங்க பெண்ணான தமிழிசை இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மருத்துவம் படித்து இரு மாநிலங்களை ஆளும் ஆளுநராக வலம் வரும் தமிழிசைக்கு ஏபிசி நியூஸ் தமிழ் சார்பாக நாமும் வாழ்த்துகளை பகிர்வோம்.