Homeசெய்திகள்அரசியல்அதிமுக- பாஜகவை ஒன்றிணைத்த அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்..!

அதிமுக- பாஜகவை ஒன்றிணைத்த அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்..!

-

- Advertisement -
kadalkanni

டெல்லிக்கு ஒரு நிர்பயா வழக்கு, கொல்கத்தாவிற்கு முதுநிலை பயிற்சி மருத்துவர் வழக்கு… அந்தவரிசையில் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கும் பேசுபொருளாகி வருகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவர் தனது காதலுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், அந்த காதலனை மிரட்டி விரட்டி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். இதுகுறித்து டிசம்பர் 24-ந் தேதி துணிச்சலுடன் அந்த மாணவி அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட கோட்டூர்புரம் போலீசார் அந்த பகுதியில் துரித உணவகம் ஒன்றை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.

நமது மாநிலத்தின் உயர்தரமிக்க கல்வி நிறுவன வளாகத்தில் நிகழ்ந்த இந்த கோர சம்பவம் கடும் எதிர்வினைகளை உண்டாக்கியது. எதிர்கட்சிகளும் தங்கள் பங்குக்கு ஞானசேகரனின் அரசியல் பின்புலம் என்ன என்று கேள்வி எழுப்பை போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த சூழ்நிலையில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் கசிந்து புதியதொரு சர்ச்சைக்கு வித்திட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் எப்படி வெளியாகின என்ற கேள்வி பூதாகரமாக உருவெடுத்தது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தமிழக போலீசாரின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி, சார் என ஒருவரை குறிப்பிட்டதாக தகவல் வெளியானது. யார் அந்த சார்? என கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியான அதிமுக தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்தது. ஞானசேகரன் திமுக உறுப்பினர் என்றும் அவரை காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. தமிழக போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க மூவர் குழு ஒன்றை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த மூவர் குழுவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடும் என பேசப்பட்டது. எனவே அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட மூவர் குழுவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்தால் தங்கள் தரப்பை கேட்ட பிறகே இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முறையிட்டுள்ளனர். இதேபோன்று இதே விவகாரத்தில் தமிழக பாஜகவைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவரும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அண்ணா பல்கலை மாணவி விவகார வழக்கில் அதிமுகவும், பாஜகவும் ஒன்றாக கை கோர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளது திமுக அரசுக்கு கூடுதல் நெருக்கடி என்பதை மறுக்க முடியாது.

MUST READ