தமிழகத்திற்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, மத்திய அரசு இடையிலான மோதல் போக்கு பல்வேறு விதங்களில் எதிரொலித்து வருகிறது. இது கொள்கை ரீதியாக, திட்டங்கள் சார்ந்த நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் காணலாம். கடந்த சில மாதங்களாக சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதியை பகிர்ந்து கொள்ளும். இவற்றை கொண்டு பள்ளிகளின் மேம்பாடு, ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி, திறன் மேம்பாடு, மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்டவற்றுக்கு செலவிடப்பட்டு வருகிறது. மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதியானது ஒவ்வொரு ஆண்டும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான நிதி ஒதுக்கீட்டை இம்முறை மத்திய அரசு செய்யவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் இருந்து தொடர் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. கண்டனங்களும் வைக்கப்பட்டன. ஆனால் எந்தவித பலனும் இல்லை. இந்த சூழலில் தான் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை பலரும் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய 2,152 கோடி ரூபாயைப் பறித்து, தற்போது வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களைத் தண்டிக்கும் நோக்கில் இத்தகைய வலுக்கட்டாயமான செயலைச் செய்கின்றனர்.
இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசும் ஒரு மாநிலத்தை அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்காக மாணவர்களின் கல்விக்குத் தடை ஏற்படுத்தும் அளவுக்குக் இரக்கமில்லாமல் நடந்து கொண்டதில்லை. தமிழ்நாட்டு, தமிழ் மக்கள் மீதான வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்படும் அநீதியின் முழு உருவம் பா.ஜ.க. என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்ததால், தமிழ்நாட்டுக்கான ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு மீதான மத்திய அரசின் அநீதி எல்லை மீறி செல்கிறது.
தமிழக மக்கள் மீதான வெறுப்பின் முகமாக பாஜக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது.தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக மிரட்டும் மத்திய அரசு. தமிழக மாணவர்களின் உரிமைகளுக்காக திமுக அரசு துணை நின்றதற்காக தமிழகம் தண்டிக்கப்படுகிறது.பழிவாங்கலுக்காக கல்வியின் கழுத்தை நெரிக்கும் இரக்கமற்ற எந்த அரசாங்கமும் இந்திய வரலாற்றில் இருந்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.