அதுவரைக்கும் நல்லா இருக்குறவங்க அது எப்படி கைது செய்ய வரும்போது மட்டும் நெஞ்சுவலின்னு போய் ஆஸ்பிடல்ல படுத்துக்கிறாங்க என்று பொதுமக்களும் கிண்டலடிக்கும் அளவுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையும் அமைந்திருக்கிறது. ‘இடுக்கண் வருங்கால் நகுக. இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக’, ’பிரிக்க முடியாதது அரசியல்வாதியும் நெஞ்சுவலியும்.’, ’ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே’ என்று நடிகை கஸ்தூரியும் கிண்டலடித்திருக்கிறார்.
’அய்யோ கொல்றாங்களே… அய்யோ கொல்றாங்களே…’ என்று நள்ளிரவில் தன்னை கைது செய்ய வந்தபோது மறைந்த கருணாநிதி சத்தம் போட்டதை செந்தில்பாலாஜியின் கதறலோடு ஒப்பிட்டு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே நேரம், பல மணி நேரம் விசாரணை டார்ச்சரை தாங்கமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகித்தான் தாங்க முடியாமல் கதறியிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி என்ற முணுமுணுப்பும் இருக்கத்தான் செய்கிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது, பல்வேறு விமர்சனங்களையும் சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறது. செந்தில்பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு தாக்கல் செய்ததும், செந்தில்பாலாஜியின் மருத்துவமனை நிலவரங்களும் கேலிக்கூத்து என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இதைவைத்து கடுமையான விவாதங்களை செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். உடல்நிலை ரொம்ப மோசமடைந்துள்ளது என்று சொல்கிறார்கள். ஆனால், ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக பேஸ் மாஸ்க் போட்டிருக்கிறார். கையில் வெரும் band-aid மட்டுமே போட்டிருக்கிறார்; டிரிப்ஸ் போடவில்லை. செந்தில்பாலாஜி அமர்ந்திருக்கும் கட்டிலுக்கு பின்னால் இருக்கும் மானிட்டர் வேலை செய்யவில்லை ஆதாரத்துடன் வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பல மணி நேரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்த அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறது பாஜக என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்திருக்கிறார். அதே நேரம் நள்ளிரவில் தன்னை கைது செய்த போது அதிகாரிகளை கைது செய்ய விடாமல் தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று சொல்லி கதறி, உதவி செய்ய வந்த அதிகாரிகளையும் காலால் எட்டி உதைத்து ஆர்ப்பாட்டங்கள் செய்தார் செந்தில் பாலாஜி.
அதன் பின்னர் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை முதல்வர் முதல் திமுகவின் அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். இது குறித்து அமைச்சர் பி. கே. சேகர் பாபு சொல்லும்போது , பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறார். பலமுறை பெயர் சொல்லி கூப்பிட்டும் கூட, சுயநினைவு இல்லாமல் கிடக்கிறார் என்று கூறி பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை சந்தித்த பொழுது அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதை சொல்லும் விதமாக நல்லபடியாக அவர் அமர்ந்து கொண்டு முதல்வருடன் பேசும் படம் வெளியாகி இருக்கிறது. இந்த இந்தப் படத்தை வைத்து தான் நெட்டிசன்கள் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.
தீவிர சிகிச்சையில் இருக்கும் இருதய நோயாளி என்றால் ஆக்சிஜன் மாக்ஸுடன் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு இருப்பார். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த உதவியும் இல்லாமல் அமர்ந்து கொண்டு ஆரோக்கியமாக முதல்வருக்கு விளக்கம் அளித்து கொண்டிருக்கிறார். முதல்வர் பேசி சந்தித்து விட்டு சென்ற பின்னர் ஆஞ்சியோகிராம் எடுக்கப்பட்டு இருதயத்தில் அடைப்பு இருந்ததாகவும், பைபாஸ் சர்ஜரி தேவை என்றும் செய்திகள் வெளியாகின்றன. அதன் பின்னர் அவர் காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு மாற்றப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை முதல்வர் முதல் அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று நலம் விசாரிக்கிறார்கள். செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவும் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரிக்கிறார் . அப்படி இருக்கும்போது கண்ணுக்கு முன்னால் தன் கணவர் இருக்கும்போது ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்கிறார் மேகலா. கண் முன்னாலேயே கனவர் இருக்கும்போது ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்வது மக்களை எந்த அளவுக்கு முட்டாளாக நினைக்கிறார்கள் இவர்கள் என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
நள்ளிரவு கைது ஏன்? செந்தில்பாலாஜி காவேரிக்கு மாற்றப்பட்டது ஏன்? ஆட்கொணர்வு மனு கேலிக்கூத்தா? என்பது குறித்து வழக்கறிஞர் வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார்.
‘’ஆள் எங்கே இருக்கிறார். அவரின் தற்போதைய நிலை என்ன? என்பதெல்லாம் தெரியாத நிலையில்தான் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும். ஆனால் அமலாக்க துறையால் அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இருக்கும்போது எதற்காக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது என்றால் இது மிகச் சரியான நகர்வு . ஒரு நபரை மர்ம நபர்கள் சிலர் எப்படி கடத்திச் செல்வார்களோ? அப்படித்தான் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கொண்டு சென்றனர்.
நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து அவரை டெல்லி கொண்டு செல்வது தான் அமலாக்க துறையின் நோக்கம் . டெல்லி கொண்டு சென்றால்தான் அவரை தங்கள் இஷ்டத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்த முடியும் என்பது அவர்களது திட்டம் . இதற்கிடையில் செந்தில் பாலாஜி உடல்நிலையால்தான் அவர் தமிழக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு அமைச்சராக இருப்பவரிடம் எதற்காக விசாரணை என்றே சொல்லாமல் அதிகாரிகள் டெல்லி அழைத்துச் செல்ல முயன்று உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழகத்தில் கைது செய்தால் அவரை தமிழக நீதிமன்றத்தில் தான் ஆஜர்படுத்த வேண்டும். தமிழக சிறையில்தான் அடைக்கவேண்டும். ஆனால் அவரை டெல்லி கொண்டு சென்று தங்கள் இஷ்டப்படி துன்புறுத்தி சித்திரவதை செய்து விசாரணை நடத்த வேண்டும் என்பது அமலாக்கத்துறை அதிகாரிகளின் திட்டம். தமிழகத்தில் கைது செய்து விட்டால் அந்தத் திட்டத்திற்கு இடம் இருக்காது என்பதால் தான் அவரை நள்ளிரவில் கைது செய்து டெல்லிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் செந்தில் பாலாஜியின் உடல்நிலை காரணத்தால் தான் தமிழக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார்.
என்ன வழக்கு? என்ன விசாரணை ? என்ற விவரம் அமலாக்கத்துறை எதுவும் சொல்லாததால் , அமலாக்க துறையை சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆட்கொணர்வு மனுவை திமுக வழக்கறிஞர் இளைஞர் அணி தாக்கல் செய்தது. ஆட்கொணர்வு மனு மட்டும் தாக்கல் செய்யவில்லை என்றால் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதி செய்து அதன் பின்னர் அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அவரை மிரட்டி சித்திரவதை செய்து அச்சுறுத்தி விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் வாங்க வேண்டும் என்பதுதான் அமலாக்கத் துறையின் திட்டமாக இருந்திருக்கிறது . இதை எதிர்கொள்வது என்றால் ஆட்கொணர்வு மனுவை தவிர வேறு வழியில்லை. அதனால்தான் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது . அதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது . நீதிபதியும் அமைச்சர் நேரில் வந்து பார்த்துவிட்டு அவரை சிறையில் வைக்க கூடாது மருத்துவமனையிலேயே வைத்திருந்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லி கொண்டு சென்று கைது செய்யும் அமலாக்க துறையின் திட்டம் நிறைவேறாமல் போய் இருக்கிறது’’ என்கிறார்.
செந்தில்பாலாஜியின் குடும்ப மருத்துவர் காவேரி மருத்துவமனையில் பணிபுரிவதால், அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்கிறார் வழக்கறிஞர் வைரமுத்து. அரசு மருத்துவமனையில் இருந்தவரை இருந்தவர் காவேரி மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தது ஏன்? அப்படியே காவிரி மருத்துவர்கள் தான் விருப்பம் என்றால் கூட அவரால் அரசு மருத்துவமனைக்கு வந்து அறுவை சிகிச்சை அளிக்க முடியாதா என்ன? அதற்கு ஏன் அரசு முயற்சி செய்யவில்லை ? அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்வது பாதுகாப்பானது இல்லை என்று அமைச்சர் நினைக்கிறாரா? அமைச்சரே இப்படி நினைத்தால் பொதுமக்கள் எப்படி அங்கே அச்சமின்றி அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும் என்ற சலசலப்புகளும் எழுந்திருக்கின்றன . பைபாஸ் சர்ஜரி அவசரமாக செய்யப் போகிறோம் என்று சொல்லிவிட்டு பல மணி நேரம் ஆகியும் கூட அறுவை சிகிச்சை தொடங்கப்படாமல் இருப்பதும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.