Homeசெய்திகள்அரசியல்பா.ஜ.க நிர்வாகியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

பா.ஜ.க நிர்வாகியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

-

பா.ஜ.க நிர்வாகியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

தாம்பரம் ரயில்நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகத்தின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மக்களவை தேர்தலின் போது, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 4 கோடி பணம் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, தமிழக பா.ஜ. தலைமை நிலையச் செயலாளர் கேசவவிநாயகத்துக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த சம்மனை எதிர்த்தும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் கேசவ விநாயகம் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது, கேசவ விநாயகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், எந்த ஆதாரங்களும் இல்லாமல் மனுதாரரை விசாரணைக்கு அழைத்தாகவும்,  நேற்று விசாரணைக்கு ஆஜராகி, நான்கு மணி நேரத்துக்குப் பின், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

விசாரணைக்கு சென்று திரும்பிய மறுநாளே, மொபைல் போன், சிம் கார்டுகளை ஒப்படைக்கக் கூறி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரரின் மொபைல் போன் உங்களுக்கு எதற்கு என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞர், பணம் பிடிபட்ட போது அவர் எங்கிருந்தார் என்பதை தெரிவிக்க மறுத்ததால் தான் செல்போனை சமர்ப்பிக்க கோரியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்ற போதும், மனுதாரரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால், அவரை துன்புறுத்தக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேவைப்பட்டால், நீதிமன்ற அனுமதியுடன்  கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.

MUST READ