விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து செங்கோட்டையன் கூறுகையில், ‘‘அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் விழாவை ஏற்பாடு செய்த குழுவினர் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர்.அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா. 2011யில் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவை நான் புறக்கணிக்கவில்லை. விழாவிற்கு செல்லவில்லை” என்று கூறினார்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”செங்கோட்டையன், வெளிப்படையாக எடப்பாடியுடன் மோதுவது பெரிதும் ஆர்வமூட்டக்கூடிய செய்தியாக மற்ற கட்சிகளுக்கு தெரிகிறது. இயல்பில் செங்கோட்டையன் மென்மையானவர். அதாவது சுலபத்தில் பந்தயத்திலிருந்து விலகிக் கொள்ள கூடியவர். ஓ பன்னீர்செல்வம் முதல்வரான போதுகூட அவர் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. அதைவிட முக்கியம் தன் மென்மைப்போக்கால் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு எல்லோருடனும் அமைதியாக வேலை பார்த்தவர்.
ஆனால் எதிர்ப்பக்கம் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தனது இருப்புக்காக யார் ஒருவரையும் அரசியல் ரீதியாக காலி செய்யத் தயங்காதவர். ஓபிஎஸ், டிடிவி இருவரையும் சேர்த்துக் கொள்ள பாஜக கொடுத்த கடும் அழுத்தத்தை நிராகரித்தார். அதற்கான எந்த விலைக்கும் அவர் தயாராக இருந்தார். சசிகலாவுக்கு எத்தனை தூரம் பணிவு காட்டினாரோ அதற்கு இணையான தீவிரத்தோடு அலட்சியம் காட்டியவர்.
சொந்தக் கட்சி அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக ஒழிப்பதில் தயக்கம் காட்டாத எடப்பாடியோடு சரணாகதியையே அரசியல் உத்தியாக வைத்திருக்கும் செங்கோட்டையன் சண்டைக்குத் தயார் என சிக்னல் கொடுக்கிறார் என்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே கருத வேண்டும். செங்கோட்டையன் இப்படி பேசும் அளவுக்கு எடப்பாடி என்ன செய்தார் அல்லது எடப்பாடியோடு மோதும் அளவுக்கு செங்கோட்டையனுக்கு சப்போர்ட் எங்கிருந்து கிடைக்கிறது என்பதுதான் இதில் தீர்க்கப்பட வேண்டிய புதிர். பிப்ரவரி 9 ஆம் தேதி நாமக்கல்லில் செங்கோட்டையன் ரகசியமாக சந்தித்த பிரமுகர் யார் என்று தெரிந்தால் புதிர் அவிழக் கூடும்… ஆக, அதிமுகவுடன் சீட் பேரத்தைத் தொடங்கிவிட்டது டெல்லி” என்கிறார்கள்.