வெற்றித் தீர்ப்பின் மகிழ்ச்சியைப் பாராட்டுவதற்கு தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் நேரில் வருகை தந்தார். சௌகிதார் என்று பிரதமர் மோடி தன்னைத்தானே சொல்லிக்கொண்டார். சமூகநீதியின் சரித்திர நாயகன் என்று உங்களை சொல்லி வருகிறோம். இப்போது மாநில உரிமையின் காவலராகவும் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் தான் சமூகநீதிக்கும் மாநில உரிமைக்குமான உண்மையான மக்களின் காவலர் என்று பாராட்டினார்.சட்டப் போராட்டத்தின் வழியே திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைமையிலான அரசும் பெற்றுத் தருகின்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவையாக இருக்கும் என்பதுதான் வரலாறு. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை இரத்து செய்து, மாநில உரிமைகளைக் காத்திடும் மகத்தான தீர்ப்பினை, திராவிட மாடல் அரசு முன்னெடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day ஆகும்.
இந்திய நாடாளுமன்றம் என்பது அனைத்து மாநிலங்களின் தொகுப்புணர்வு என்பதை 1962-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் தன்னுடைய முதல் பேச்சிலேயே உணர வைத்தவர் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அவருடைய குரலுக்குப் பிறகுதான், மாநில உரிமைகள் சார்ந்த குரல்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இந்திய அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளின்படி மாநிலங்கள் தனக்கான சட்டங்களை இயற்றி, தற்சார்பாகச் செயல்படும் அதிகாரம் கொண்டவை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் 1974-ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர்.
பேரறிஞர் அண்ணாவும் உயிர்நிகர் தலைவர் கலைஞரும் கட்டிக் காத்த மாநில உரிமைகளுக்கு ஆபத்து நேரும் போது, தி.மு.க.வின் தலைவர் என்ற பொறுப்பிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பிலும் உள்ள உங்களில் ஒருவனான நான் மாநில உரிமை காக்கும் சட்டப்போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன். மும்மொழித் திட்டத்தை தேசிய கல்விக் கொள்கையின் வழியே ஒன்றிய பா.ஜ.க அரசு திணிக்க முயற்சிப்பதை எதிர்த்து நின்று, இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை என்பதில் உறுதியாக நின்று, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க மறுத்தாலும் எங்கள் மாநில நலனைக் காக்கும் வகையில், மாநில அரசின் நிதியிலிருந்தே கல்விச் செலவுகளை எதிர்கொள்ளும் வலிமை எங்களுக்கு உண்டு என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறோம்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்திற்கான மனித வள ஆற்றலாகத் தமிழ்நாட்டின் கட்டமைப்பை உருவாக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் மறுசீரமைப்பில் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிடுகிறது என்றதுமே, தமிழ்நாட்டைப் போல பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நாடாளுமன்ற மக்களவையில் தற்போதுள்ள வகையிலேயே மாநிலங்களுக்கான விகித்தாசாரம் தொடர வேண்டும் என்பதையும், மறுசீரமைப்புத் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் முதல் குரல் கொடுத்திருப்பதும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன் கை எடுத்திருப்பதும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.
நியாயமும் வலிமையும் கொண்ட குரல் எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்கும். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நமது திராவிட முன்னேற்றக் கழக மக்களவை -மாநிலங்களவை உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. தோழமைக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து நியாயத்தை எடுத்துரைத்தது. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதையும், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதையும், 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கினை வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியதுடன் மணிப்பூர் கலவரம், வக்ஃப் திருத்த சட்ட மசோதா, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கான உதவித்தொகை என இந்திய ஒன்றியத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்குமான குரலாக கழகத்தினரின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது.
தமிழின் தொன்மையை அறிவியல்பூர்வமாக நிரூபித்தும் அதனைப் பாராட்டக்கூட மனமில்லாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழ் விரோதப் போக்கை சுட்டிக்காட்டியும், 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான குடியுரிமையை வலியுறுத்தியும் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி எம்.பி. பேசினார். தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலையும் கைது நடவடிக்கையையும் கண்டும் காணாமல் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் போக்கையும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிப் பேசினார் கழகத்தின் மக்களவைக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு எம்.பி.
சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான வக்ஃப் சட்ட திருத்த மசோதாவின் உள்நோக்கத்தையும் அதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளையும் பற்றி மக்களவையில் திரு.ஆ.இராசா எம்.பியும், மாநிலங்களவையில் கழக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திரு.திருச்சி சிவா எம்.பி.யும் எடுத்து வைத்த கருத்துகள் இந்தியா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தின. வக்ஃப் சட்டத் திருத்தம் தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றிருந்தவரான ஆ.இராசா அவர்கள் உரிய ஆதாரங்களுடன் பா.ஜ.க அரசின் cock and bull கட்டுக்கதைகளை உடைத்தெறிந்தார். மாநிலங்களவையில் திருச்சி சிவா அவர்கள் ஆற்றிய உரையும் அதில் திருக்குறளைச் சுட்டிக்காட்டி, “சிறுபான்மையினர் கண்ணீர் வெள்ளமாக மாறி உங்கள் அரசை மாற்றும்” என்ற சொற்களும் இந்தியாவின் மனசாட்சியாக ஒலித்தன.
மக்களவையில் திரு.தயாநிதி மாறன் எம்.பி. அவர்கள் இது குறித்து பேசும்போது, இன்று முஸ்லிம்களுக்கு எதிராகச் சட்டம் இயற்றுபவர்கள், நாளை கிறிஸ்தவர்கள், தலித்கள் என அனைத்து மக்கள் மீதும் இதுபோன்ற தாக்குதலை நடத்துவார்கள்” என்பதை எடுத்துரைத்தார். இரயில்வே துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கை இந்தியாவின் ஏழை-நடுத்தர மக்களை எந்தளவில் பாதிக்கும் என்பதை திரு.ஜெகத்ரட்சகன் எம்.பி. அவர்கள் விளக்கிப் பேசினார். மாநிலங்களவையில் அண்ணன் வைகோ அவர்களின் கம்பீரக் குரல், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் வளர்ப்பில் உருவான நாடாளுமன்றப் புலி அவர் என்பதை நிரூபித்தது.
தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க எனத் தமிழ்நாட்டின் 39 மக்களவை எம்.பி.க்களும், மாநிலங்களவையில் உள்ள கழக எம்.பி.க்களும் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதையும் தம் வயப்படுத்தி, மாநில நலனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கை குரலாக ஒலித்தார்கள். 25 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற ஜனநாயக அனுபவம் பெற்ற ஆ.இராசா அவர்கள் மக்களவையின் மாற்று அவைத்தலைவராக அமர்ந்து அவையை நடத்திய திறனும், அதுபோல மாநிலங்களவையை, கழகத்தின் இளைய எம்.பி.யான தம்பி எம்.எம்.அப்துல்லா நடத்திய பாங்கும், நாற்பதுக்கு நாற்பது வெற்றி தந்த தமிழ்நாடு-புதுச்சேரி வாக்காளர்களின் தேர்வு மிகச் சரியானதாக அமைந்திருப்பதைக் காட்டியது.
உரிமைக்கான குரலாகத் தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். நீதிக்கட்சியில் தொடங்கி அதன் நீட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் வரை உரிமைப் போராட்டம் ஓயவில்லை. போராட்டம் ஒரு புறம், ஆட்சி நிர்வாகம் மறுபுறம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணியும் பயணமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலன்களையும் உள்ளடக்கியதாகவும், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை மேம்பாட்டை மையப்படுத்தியும் அமைந்துள்ளன. 2024-25-ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு 9.69% என்ற அளவில் உயர்ந்து நிற்பதும், பரவலாக்கப்பட்ட வளர்ச்சியின் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் ஏற்றம் பெற்று, பெண்கள் பங்கேற்புடனான வேலைவாய்ப்புகள் பெருகியிருப்பதும் ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்தின் மூலமாகவே வெளிப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சியை அடைவதற்கும் தொடர்வதற்கும் தான் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு மைல் கல்லாக ஏப்ரல் 8-ஆம் நாள் வெளியான மகத்தான தீர்ப்பு அமைந்துள்ளது. பள்ளிக்கல்வியிலும், உயர்கல்வியிலும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் முதன்மை இடங்களைப் பிடித்துள்ளதை அனைவரும் அறிவோம். இந்தப் பெருமையைச் சிதைக்கும் வகையில், பல்கலைக்கழக வேந்தர் என்ற அதிகாரத்தைக் கொண்டிருந்த மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உயர்கல்வியில் அறமற்ற அரசியலைப் புகுத்தி, காவிச் சாயம் பூசிக்கொண்டிருப்பதற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் தராமல், ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் அதிகார அத்து மீறல்களைத் தொடர்ந்து கொண்டிருந்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆளுநர்களின் அதிகார அத்துமீறலுக்கு எதிரான வழக்குகள் என்பவை உச்சநீதிமன்றத்திற்குப் புதியதன்று. ஒன்றிய பா.ஜ.க அரசு தன்னால் வெற்றிபெற முடியாத மாநிலங்களில், மாற்றுக் கட்சி அரசுகளின் செயல்பாடுகளைத் தடுப்பதற்காகவே ஆளுநர்களை நியமித்து, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கே ஆளுநர் மறுத்துவந்த நிலையில், அது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. மேற்கு வங்கம், கேரளா என பா.ஜ.க. அல்லாத அரசுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க ஆளுநர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகவும் வழக்குகள் உள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே செயல்படுவார் என்றும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை ஆளுநர் கிடப்பிலேயே போட்டிருந்ததையும், தன் அதிகாரத்திற்கு மீறிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்ததையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 8 அன்று காலையில் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்ற நிலையில், தீர்ப்பு வெளியாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றுகின்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது நியமனப் பதவியில் உள்ள ஆளுநரின் வேலை என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு.பர்திவாலா, திரு.மகாதேவன் அமர்வின் தீர்ப்பு தெளிவாகத் தெரிவித்தது. இந்தச் செய்தி, சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்த உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்தவுடன், உடனடியாக அவையில் இருந்து வெளியே வந்து, இந்த மகிழ்ச்சிகரமான வெற்றிக் தீர்ப்பு குறித்த அறிவிப்பை எழுதி, அவைக்குச் சென்று அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் வாசித்தேன். எந்தச் சட்டமன்றத்தில், தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டி மாநில உரிமைகளின் குரலைப் பேரறிஞர் அண்ணா உரக்க முழங்கினாரோ, எந்தச் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றினாரோ அந்த சட்டமன்றம் தான் வலிமையானது, ராஜ்பவனுக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பாராட்டி அறிவிப்பை வெளியிட்டேன். முதலமைச்சரான என் அறிவிப்பைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் உள்ள தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை ஆதரித்துப் பேசினார்கள்.
இந்த வழக்குத் தொடரப்பட்டதிலிருந்தே வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து, மாநில உரிமைகளை நிலைநாட்ட எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள், ஆதாரங்கள் குறித்து கலந்துரையாடி வந்தேன். கழகம் எப்போதும் சொல்லி வருவது போல, ஆளுநர் பதவி என்பது ஒன்றிய – மாநில அரசுக்கிடையிலான தபால்காரர் பணிதான் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்புரைத்திருக்கிறது.
தீர்ப்பு வெளியான நாளில், கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடி, வெற்றித் தீர்ப்பு கிடைத்திட காரணமாக இருந்த முகுல் ரோஹத்கி, ராகேஷ் திரிவேதி, அபிஷேக் மனு சிங்வி ஆகிய மூத்த வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன். இந்த வழக்கின் வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் நேரில் சந்தித்து என்னிடம் தீர்ப்பின் விவரங்களைத் தெரிவித்தபோது, தலைவர் கலைஞர் சொன்னது போல ‘வின் சன்னாக வில்சன் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவரைப் பாராட்டி மகிழ்ந்தேன்.
மாநில உரிமைக்கான திராவிட முன்னேற்றக் கழக அரசின் தொடர் சட்டப் போராட்டத்தில் இந்தத் தீர்ப்பு முக்கியமான வெற்றி என்பதால், தங்கள் மாநிலங்களில் ஆளுநரின் அத்துமீறல்களால் ஜனநாயகத்தைக் காக்கப் போராடுகிற அரசுகளும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு பெற்றுத் தந்துள்ள தீர்ப்பினை முன்மாதிரியாக வைத்து தங்களின் வழக்குகளை முன்னெடுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. கேரள மாநில முதலமைச்சர் சகாவு பினரயி விஜயன் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பாராட்டி கருத்து வெளியிட்டார். பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான செய்தியாக இந்தத் தீர்ப்பு இடம்பெற்றது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் தலைவர்கள், பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள பெரியோர்கள் எனப் பலரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றித் தீர்ப்பின் மகிழ்ச்சியைப் பாராட்டுவதற்கு தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் நேரில் வருகை தந்தார். “சமூகநீதியின் சரித்திர நாயகன் என்று உங்களை சொல்லி வருகிறோம். இப்போது மாநில உரிமையின் காவலராகவும் இருக்கிறீர்கள்” என்று வாழ்த்தினார். அவருடைய வாழ்த்துகளைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, “காவல் காக்கும் வேலையைத்தானே மக்கள் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்” என்று சொன்னேன். நீண்ட பொதுவாழ்வு அனுபவம் கொண்ட ஆசிரியர் அய்யா உடனே தனக்கேயுரிய சொல்லாற்றலுடன், “சௌகிதார் என்று பிரதமர் மோடி தன்னைத்தானே சொல்லிக்கொண்டார். ஆனால், நீங்கள் தான் சமூகநீதிக்கும் மாநில உரிமைக்குமான உண்மையான காவலர். மக்களின் காவலர் என்று பாராட்டினார்.
தாய்க்கழகத்தின் பாராட்டு எப்போதுமே கூடுதல் உழைப்புக்குத் தெம்பு தரக்கூடியது. அதனால்தான், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அத்துமீறல்களைத் தகர்த்தெறிந்த வெற்றித் தீர்ப்பு வெளியான வேகத்தில், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 9-ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சமூகநீதியிலும் மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். சமூகநீதிக்கும் – மாணவர்களுக்கும் – மக்களுக்கும் எதிரான பா.ஜ.க.வினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும், அவர்களின் வழியில் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினரும் புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடியான தி.மு.கழகம், நீட் தேர்விலும் விலக்கு பெறும் வகையில் தமிழ்நாட்டின் தனித்தன்மையை சட்டப் போராட்டத்தின் வழியே முன்னெடுக்கத் தீர்மானித்து, ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும். மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மொழிந்த முழக்கத்தை முன்வைத்து நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக தி.மு.க செயல்பட்டு தன் போராட்டத்தைத் தொடா்ந்து செய்யும்.
புதிய வக்ஃபு சட்ட மசோதா இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது – அப்துல் கரீம்