பாஜகவில் அண்ணாமலை வருவதற்கு முன் தமிழகத்தில் குருமூர்த்தியின் ஆதிக்கம் கொடிகட்டிப்பறந்தது. இங்கு ஓபிஎஸே மிகப்பெரிய தலைவர். அதிமுக தலைமையை ஓபிஎஸை வைத்தே பாஜகவின் கைக்குள் கொண்டு வந்துவிடலாம் குருமூர்த்தி கணக்குப்போட்டு கொடுத்திருந்ததாகக் கூறப்பட்டது.
அதனால், அதிமுக 2021 முதல் 2023 வரைபல குழப்பங்களை சந்தித்ததற்கு வெளியிலிருந்து பாஜக, திமுக ஆட்டுவித்தப்படி ஆடினார் ஓபிஎஸ். இதனால் அதிமுக பாஜக உறவு முறிந்தது. அண்ணாமலை தன் கணக்கிற்கு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தியதால் அந்தக் கூட்டணி முறிந்தது. திமுகவுக்கு லாபம். துக்ளக் ஆண்டு விழாவில் அதிமுக பாஜக கூட்டணி சேரவேண்டியது கட்டாயம் என்பதுபோல் பேசிய குருமூர்த்தி அடுத்தடுத்து அண்ணாமலை ஞாபகத்திற்கு வர தானும் குழம்பி வாசகர்களையும் குழப்பி எது நடந்தால் கூட்டணி சாத்தியம் என்பதை சொல்ல தெரியாமல் கடந்து சென்றார்.
அவர் தனது பேச்சில், “திமுக ஆட்சியை அகற்ற எப்படி வியூகம் வகுக்க போகிறார்கள் எதிர்கட்சிகள் என்பது தான் நம்முன் உள்ள கேள்வி. திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டுக்கு நாம் ஆற்றும் தொண்டு. அதிமுக தேச விரோத கட்சி அல்ல, பாஜகவும் அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் நமக்கு சந்தேகமே கிடையாது. ஆனால் எடப்பாடி மாதிரி ஒரு தலைவரை வைத்துக்கொண்டு எப்படி இணைப்பை ஏற்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை.
பல தலைவர்களிடம் பழகி இருக்கிறேன். ஒரு அரசியல் தலைவருக்கான வடிவமே அவரிடம் இல்லை. 2021 பொதுத்தேர்தலில் அவரை நான் தனிப்பட்ட முறையில் போய் பார்த்தேன். அமித்ஷா சொன்னதன் பேரில் எடப்பாடியை சென்று சந்தித்தேன். அவர் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து 10, 12 சீட்டு (டிடிவிக்கு) ஒதுக்கியிருந்தால் திமுகவுக்கு தனி பெரும்பான்மை கிடைத்திருக்காது.
நீங்கள் வெல்ல முடியாது. ஆனால் திமுகவுக்கு மெஜாரிட்டி இல்லாமல் செய்யலாம் என்றேன். திமுகவுக்கு தனிப்பெரும்பானமை கிடைக்காவிட்டால் 2006-ல் கருணாநிதி தனியாக ஆட்சி நடத்தியது போல் ஸ்டாலினால் ஆட்சி நடத்த முடியாது கவிழ்ந்துவிடும் என்று சொன்னேன், ஆனால் நாங்க ஜெயிக்கிறோம், நீங்கதான் நாங்கள் ஜெயிக்கமாட்டோம்னு சொல்கிறீர்கள் என்றார். எனக்கு புரியவில்லை யார் இவருக்கு ஆலோசனை கொடுக்கிறார், யார் இவருக்கு புள்ளிவிவரம் கொடுக்கிறார் என்று புரியவில்லை.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா எப்படி உறுதியாக இருந்தார்கள், கட்சி அரசியல் என்பதே இப்போது இல்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் இவர்களால் எனக்கென்ன ஆதாயமா? கட்சிக்கு கட்சி இதுபோன்ற ஆட்கள் இருக்கிறார்கள்”. என்று எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசினார்.
ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் கட்சி துண்டு துண்டாக உடையும் நிலையில் அதை ஒன்றுப்படுத்தி பொதுச்செயலாளராக ஒற்றுமைப்படுத்தி கட்சிக்கு எதிராக உள்ளவர்களை வெளியேற்றி 2026 தேர்தலை நோக்கி 98% பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சி பலத்துடன் நகர்கிறவரை அரசியல் அறியாதவர் என்று சொல்லி விமர்சிக்கும் குருமூர்த்திதான் ஓபிஎஸ்சை ஆதரிக்கிறார்.
சோ ராமசாமி அரசியல் அறிந்தவர். அவர் இதுபோன்ற காரியத்தை ஒருபோதும் செய்ததில்லை. ஆனால் சோ வுக்கு பின் வந்த துக்ளக் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள குருமூர்த்தி தன்னை ’சோ’ போன்று கருதிக்கொண்டு திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என சொல்லிக்கொண்டே எடப்பாடி போல் ஒரு தகுதியற்ற அரசியல் தலைவரை பார்த்ததில்லை என்று சொல்கிறார். இது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று தெரியாதா? என்ன வாதம் இது என்று தெரியவில்லை.
அதிமுக பாஜக கூட்டணி வரவேண்டும் என்கிறார், ”பாஜக -அதிமுக சேரவேண்டும் என்கிற எண்ணத்தில் நான் கூறுகிறேன். பாஜக தன்னுடைய நிலைமையை அதிகமாக மாற்றிக்கொண்டு எப்படியாவது இணையவேண்டும் என்று முடிவெடுத்தால் அது பாஜகவுக்கு நஷ்டம்தான் வரும், இதை பாஜக உணர வேண்டும்” என்றும் குழப்பி இருக்கிறார் குருமூர்த்தி.
கூட்டணி அரசு இனி சாத்தியமா என்று கேட்டபோது அது குறித்தும் தெளிவற்ற பதிலை அளிக்கவில்லை. விஜய்யை தொடாமல் கடந்து சென்றார். அதிமுக கூட்டணி வேண்டும், வேண்டாம். எடப்பாடி சரியான தலைவர் அல்ல என்பது தான் குருமூர்த்தியின் சுறுக்கமான கருத்து.