அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் – திருமாவளவன் கோரிக்கை
நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் நாங்குநேரி விவகாரத்தை மட்டும் விசாரணை செய்யாமல் தமிழக முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இதுபோன்று ஏற்பட்டுள்ள வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்யவேண்டும் என விசிக கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவ கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் மேடையில் பேசுகையில்,
நாங்குநேரி விவகாரத்தை கண்டித்து 21ந்தேதி விசிக சார்பில் எனது தலைமையில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த விவகாரத்தை கண்டிப்பதுடன் ஆட்சியாளர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு அதிகம் உள்ளது.
மாணவர்களிடையே சாதி ஆதிக்கம் உள்ளது வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை சாதி வெறியர்களாக சித்தரிப்பதா? என்கிற குழப்பம் உள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் எதிர்காலம் உள்ளது. அவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். இந்த சாதி வெறியில் இருந்து வெளியே வரவேண்டும் என்பது எனது எண்ணம்.
விசிக அமைப்பாக இருந்தபோது மாணவர் அணி உருவாக்கி 1990ம் ஆண்டு தலித் ஸ்டூடண்ட் பேந்த்தர்ஸ் என தொடங்கினோம். ஆனால் சில மாதங்களிலேயே கலைத்துவிட்டேன் காரணம் மாணவர்களிடையே சாதி ரீதியிலான பிரிவு ஏற்படும். பொது மாணவர்கள் வர மாட்டார்கள் என எண்ணி கலைத்துவிட்டேன். அந்த முடிவை நான் எடுக்கும் போது 27 வயது.
ஆனால் இன்றும் 70 வயது 80 வயது முதியவர்கள் மாணவர்களிடையே சாதி வெறியயை ஊட்டுகிறார்கள். பிரிவை ஏற்படுத்துகிறார்கள் மாணவர்களின் இந்த வெறுப்பு அரசியல் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
வாழ்வியலில் அனைவரும் ஒன்றாக பயணித்தாலும் வாழ்விடம் என வரும்போது சாதிய கட்டமைப்புக்குள் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை சமூக கட்டமைப்பு உருவாக்கி வைத்துள்ளது. சாதி மோதல்களுக்கு காரணம் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள் தங்கள் சமூகம் தொடர்பாக உணர்ச்சி பூர்வமான வதந்திகளை பரப்பி சாதி ரீதியான அமைப்புகள் சங்பரிவார் அமைப்புகள் கலவரத்தை ஏற்படுத்துகின்றனர்.
சாதி மத அமைப்புகள் அதற்குறிய அடையாளத்துடன் செயல்படாமல் பொது அமைப்பு போல் காட்டி கொண்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபடுகின்றனர். கர்நாடகாவில் புர்கா அணிந்த பெண்ணை சுற்றி சில ஆண் மாணவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோசமிட்டனர் அதற்கு பின்னால் ஒரு மத அமைப்பு செயல்பட்டது.
மத அடிப்படையில் செயல்பட்ட சங் பரிவார அமைப்புகள் தற்போது சாதி ரீதியிலாக குடி பெருமை என்ற பெயரில் மாணவர்களிடம் வெறுப்பு நஞ்சை விதைக்கின்றனர். நாயக்கன்கொட்டாயில் நடைபெற்றதும் அது போல திட்டமிட்ட கலவரம் தான். அதற்கு பின்னால் இருந்தது சில அமைப்புகள் மட்டுமல்ல சாதி வெறி பிடித்த காவல் துறையினர், உளவுத்துறையினரும் அதற்கு காரணம்.
நாங்குநேரி விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் இளம் சிறார்கள் என்கிற அடிப்படையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நிர்பயா வழக்கில் 18 வயதிற்கு கீழ் சிலர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். அதை விசாரித்த நீதிபதி வயதை காரணம் காட்டி இந்த குற்றத்தை நியாயப்படுத்த முடியாது வயது குறைவாக இருந்தாலும் குற்றம் செய்ய வேண்டும் என உள்நோக்கம் இருந்தால் போதும் சட்டம் பொருந்தும். வயது அதற்கு தடையில்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய கோரிக்கை தாக்குதலில் ஈடுபட்ட மாணவரின் வாழ்க்கையை சீரழிப்பது அல்ல அவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில்லை அந்த மாணவரும் எதிர்காலத்தில் முற்போக்கு சிந்தனை உள்ள நபராக மாறலாம் தனது தவறை உணரலாம்.
முன்பு 1999 ஆம் ஆண்டு பெட்ரோல் கேன்களுடன் கிராமம்தோறும் சென்று சேரிகளை எரித்து நாசம் ஆக்கியவர்கள் பத்தாண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு என் தம்பி திருமாவளவன் எங்கள் கைகள் இணைந்து விட்டது இனி எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என சொல்லுகிற நிலை வந்தது.
எனவே எங்கள் கோரிக்கை தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தண்டிக்க வேண்டும் என்பதல்ல, மாறாக இதை மாணவர்களிடம் பரப்பிய நபர்கள் யார் அதன் பிண்ணனி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் அமைக்கப்பட்டஒரு நபர் ஆணையம் நாங்குநேரி விவகாரத்தை மட்டும் விசாரணை செய்யாமல் தமிழக முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இதுபோன்று ஏற்பட்டுள்ள வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்யவேண்டும். அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், ஆணையத்திற்கான முழு ஏற்பாடுகளை அரசு செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார்.