விக்கிரவாண்டில் நடைபெற்ற தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய ஆட்சியில் பங்கு, அதிகாரப்பகிர்வு பேச்சு அதிமுக, திமுக கட்சிகளுக்கு கிளியை ஏற்படுத்தி உள்ளது.
விஜயின் மாநாட்டுக்கு முன்பே விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்ததும், டெல்லியில் விஜய்க்காக சில மூவ்மெண்டுகளை முன்னெடுப்பதாக வந்த தகவல்களும் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்நிலையில், மாநாட்டில் விஜய் பேசும்போது, “ஆட்சியில் பங்கு. அதிகாரப்பகிர்வுக்கு அழைப்பு விடுத்து பேசி இருந்தார்.
இந்நிலையில் மாநாடு முடிந்த சில மணி நேரங்களில், விசிக கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், ‘‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் திரு. விஜய். அவருக்கு வாழ்த்துகள்.
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு உடனடியாக பதிலளித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில், ‘‘2026 கூட்டணி ஆட்சிக்கு, ஆட்சியில் பங்கு, அதிகார பகிர்வு. திரு, திருமாவளவன் அவர்களே. அண்ணன் திரு. ஆதவ் அர்ஜூனன் அவர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் ஊழல் அற்ற புதியதோர் தமிழகத்தை உருவாக்குவோம்’’ என பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.