2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதில் படுதோல்வியைச் சந்தித்ததால் இருகட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இதையடுத்து,2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை முறித்துக் கொண்டனர்.
அந்தத் தேர்தல் உட்பட எல்லாத் தேர்தலிலும் இரு கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்து அதனுடன் கூட்டணி அமைத்து 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என பாஜக திட்டமிட்டுள்ளது. அண்மையில், கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எஸ்.பி.வேலுமணி ரகசியமாகச் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின்போது அதிமுக இணைப்பு, கூட்டணி விவகாரம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு குறித்து முக்கிய பேச்சு நடந்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.வேலுமணிக்கு சில வேலைகளை அமித்ஷா கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் நடந்த எஸ்.பி.வேலுமணி மகன் திருமண விழாவில் ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கொடுத்த மரியாதையையும், அவர்களுக்கு அண்ணாமலை கொடுத்த மரியாதையையும் பார்த்து அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் மலர உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், பாஜகவுடன் சேர்ந்ததால் படுதோல்வியைத் தழுவினோம் எனக் கூறியவர்கள், தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர தவம் கிடக்கிறார்கள் என அண்ணாமலை கூறினார். இந்தப் பேச்சு, அதிமுக- பாஜக நெருக்கத்தில் இடைவெளியை ஏற்படுத்தியது. கூட்டணியில் சேர எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்து இறங்கி வரும் நிலையில் அண்ணாமலையின் இந்த தவம் கிடக்கும் பேச்சு மீண்டும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாடம் பாஜக மூத்த தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த அமித்ஷா, தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் பி.எல்.சந்தோஷுடன் பேசி உள்ளார். அப்போது கான்பரன்ஸ் கால் அழைப்பு மூலமாக அண்ணாமலையிடம் பேசிய அமித்ஷ, ‘‘நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல. நியமிக்கப்பட்டவர் தான். உங்களது நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் பாஜக பல்வேறு தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. உங்களது தனிப்பட்ட விவகாரத்தில் அரசியலைச் சேர்த்து தமிழ்நாட்டில் பாஜகவை கால் ஊன்ற முடியாமல் வைத்துள்ளீர்கள். இதுதான் உங்களுக்குக் கடைசி வாய்ப்பு. அதிமுக பற்றி வாய் திறக்கக் கூடாது’’ என எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு அண்ணாமலையின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக பாஜகவுடன் சேர தவம் கிடக்கிறது என நான் கூறவில்லை என மாற்றிப் பேசினார்.அதோடு, எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என அழைத்து வருகிறார்.
இதனால் மிக விரைவில் அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இரு கட்சிகளின் முன்னணிச் செயல்பாட்டாளர்கள் மத்தியில் பேச்சு இருக்கிறது.