அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்பதே எங்கள் முதல் வேலை- டிடிவி தினகரன்
அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்பதே தங்களின் முதல் வேலை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்த பின்னர் தொண்டர்களிடையே பேசிய டிடிவி தினகரன், “ஓபிஎஸ் துணையுடன் துரோகிகளிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்பதே தங்களின் தலையாய கடமை. அமமுக கடந்த இரண்டு தேர்தல்களில் சரியான வெற்றியை பெற முடியாவிட்டாலும் தங்களுடன் இருக்கும் தொண்டர்கள் டெண்டருக்காகவோ அல்லது பணத்திற்காகவோ சேர்ந்தவர்கள் அல்ல. அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் லட்சம் பேர் தங்களுடன் தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.
தற்போது தன்னுடன் இணைந்துள்ள ஓபிஎஸ் உடன் இணைந்து துரோகிகளிடமிருந்து அதிமுகவை மீட்டெடுத்து அம்மாவின் ஆட்சியை அமைப்பதே தங்களின் தலையாய கடமை. எடப்பாடி ஆட்சியில் கொள்ளை அதிகரித்தது. குறிப்பாக அம்மாவின் விசுவாசமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தது. இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை அமமுக ஆட்சி அமைந்த பின்னர் நிச்சயம் கைது செய்து தண்டனை பெற்றுத் தருவோம். ஒன்றிய அரசு 2000 ரூபாய் பண மதிப்பு இழப்பு செய்ததன் மூலம் ஏழை நடுத்தர மக்கள் பாதிப்பு அடையவில்லை. ஆண்டவர்கள் மற்றும் ஆளுகின்றவர்கள் மட்டுமே தேள் கொட்டியது போல் பயந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் ஆண்டவர்கள் மற்றும் ஆளுகின்றவர்கள் செய்த ஊழல் வெளிவரும்” எனக் கூறினார்.