”மஹா கும்பமேளாவில் எத்தனை இழப்புகள் நடந்திருக்கு. எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்பது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடையாது” என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விளையாட்டு வீரர்கள் எல்லாம் போய் வாரணாசியில் ரயில் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று அதிகாலையில் தான் அந்த செய்தி வந்தது. உத்திரபிரதேச மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்ப கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அந்த போட்டியில் ஆறு தமிழ்நாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். கோச் ஒருவரும் சென்று இருக்கிறார்.
அந்த போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த காரணத்தினால் தென் மண்டல அணி இன்று ஊருக்கு திரும்ப ஏற்கனவே பதிவு செய்திருந்த டிக்கெட்டை வைத்து அவர்களால் ரயில் ஏறி வர முடியவில்லை. கும்பமேளாவில் எவ்வளவு கூத்து நடக்கிறது என்பதை பார்த்திருப்பீர்கள். அதிகமான மக்கள் தொகையுடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முழு முழு காரணம் அங்கிருக்க கூடிய பாஜக அரசும், ஒன்றிய அரசும்தான் காரணம்.
சுத்தமாக மக்கள் கூட்டத்தை நிர்வகிப்பது எப்படி என்றே தெரியாமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டு இருக்கிறார்கள். எத்தனை இழப்புகள் நடந்திருக்கு. எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்பது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடையாது. நீங்களே நிறைய வீடியோக்கள் பார்த்திருப்பீர்கள், பகிர்ந்திருப்பீர்கள். கும்பமேளாவுக்கு சென்று வந்து ரயிலில் ஏற முடியாமல் வட மாநில மக்கள் தவித்துக் கொண்டிருந்த செய்தி இன்று வரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு பெரிய கூட்டம் வரும்போது அதற்குரிய சரியான நடவடிக்கையை மாநில அரசும் எடுக்கவில்லை, ஒன்றிய அரசும் எடுக்கவில்லை.
நம் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு ரயில் கிடைக்கவில்லை என்ற தகவல் இன்று காலை தான் எனக்கு வந்தது. உடனே நான் அதிகாரிகள் உடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிற்கு விமானம் மூலம் அவர்களை அழைத்து வருவதற்கான உத்தரவை முதலமைச்சர் அவர்களிடம் சொல்லி எடுத்து இருக்கிறோம். உடனடியாக அவர்களுக்கு விமான டிக்கெட் போட்டு கொடுத்து விட்டோம். இது அவர்களுக்கு உணவுக்கு தேவையான பணத்தையும் இங்கிருந்து அனுப்பி இருக்கிறோம்.
செலவுக்கு 15,000 அனுப்பி இருக்கிறோம். இன்று 12 மணிக்கு வாரணாசியில் இருந்து விமானம் ஏறி நாலரை மணிக்கு பெங்களூர் வருவார்கள். பெங்களூரில் இருந்து எட்டு மணிக்கு விமானம் ஏறி 9 மணிக்கு தமிழ்நாட்டிற்கு பத்திரமாக வந்து விடுவார்கள்” என அவர் தெரிவித்தார்.