தமிழக மக்கள் பெரும்பாலானோர் எதிர்பார்த்தது போல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை அலங்கரிக்க ஆயத்தமாகி விட்டார்.
எல்லோரையும் போல் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க முடியாவிட்டாலும், ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் வரவேற்கலாம்.
திமுக தொடங்கிய காலத்தில் இருந்து தலைவர்களுக்கு பற்றாக்குறை இருந்ததில்லை.
1949 ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா தொடங்கியபோது ஏசுவிற்கு இருந்த 12 சீடர்களை போல் அண்ணாவின் பின்னால் ஆற்றல் மிகுந்த இளைஞர்கள், சொற்பொழிவாளர்கள், எழுத்தாளர்கள் என்று எண்ணற்ற வீரர்கள் அணி திரண்டனர். அனைவரும் அண்ணாவின் வளர்ப்புகள்! வார்ப்புகள்!!
அறிஞர் அண்ணா மறைந்தபோது அந்த இயக்கத்தின் அடுத்த தலைவர் யார் என்கிற போட்டி இருந்தது. அந்த பந்தயத்தில் கலைஞர் போராடி வென்றார்.
1969 ல் தலைமை பதவிக்கு வந்த கலைஞர் மிசா, இரண்டு முறை ஆட்சி கலைப்பு என்று வார்த்தையால் வர்ணிக்க முடியாத சோதனைகளை கடந்து அந்த இயக்கத்தை வழி நடத்தி வந்தார்.
அத்தனை சோதனைகளுக்கு இடையிலும் திமுகவின் தலைவர் கலைஞர் தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வந்திருக்கிறார்.
தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் பாதுகாப்பு கவசமாகவே இருந்து வந்துள்ளார்.
கலைஞருக்கு பின்னர் தலைமை பிரச்சனை திமுகவிற்கு வந்துவிட கூடாது என்று அவரே ஸ்டாலினை அடையாளம் காட்டிவிட்டு மறைந்தார்.
கலைஞரின் மகன் என்பதாலேயே ஸ்டாலின் உச்சத்திற்கு வந்துவிட வில்லை. திமுகவின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் வருவதற்கு முன் “கல் சூளையில் வெந்து தனிந்த செங்கல் போல்” பல நெருக்கடிகளை, சோதனைகளை சந்தித்து தான் தலைமை இடத்தை அடைந்திருக்கிறார். கலைஞரின் வளர்ப்பு, கலைஞரின் தேர்வு எந்த விதத்திலும் சோடப்போகவில்லை என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொண்டார்கள்.
கலைஞரைப்போல் பேச்சாற்றல் பெற்றவரல்ல ஸ்டாலின், கலைஞரைப்போல் எழுத்தாற்றளில் புலமை பெற்றவரல்ல. ஆனால் கலைஞரை விட நூறு மடங்கு நிதானமானவர் ஸ்டாலின். பல மடங்கு திறமை வாய்ந்தவர் என்பதை முதலமைச்சர் பதவிக்கு வந்ததும் மக்களுக்கு உணர்த்தி விட்டார்.
யார் யார் எந்தெந்த துறையில் சிறந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களை கண்டுபிடித்து அவர்களை அந்த இடத்தில் நியமனம் செய்து நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு செல்லக்கூடியவரே வெற்றியாளன். அதை மு.க.ஸ்டாலின் சிறப்பாக செய்கிறார்.
புகழின் உச்சியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிதும் கர்வம் இல்லாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாமல் எதிரிகளையும் எளிதில் வசப்படுத்தும் பேச்சு என்று சாதுர்யமாக நிர்வாகத்தை வழி நடத்தி செல்கிறார்.
திமுக என்ற கப்பல் தொடர்ந்து இயங்க வேண்டும். அது திசை தெரியாமல் ஒரே இடத்தில் நின்றுவிடக் கூடாது.
திமுக என்னும் கப்பலுக்கு கலங்கரை விளக்கு தேவைப்படுகின்றது.
திமுக என்ற கப்பலுக்கு இந்த நூற்றாண்டிற்கு உதயநிதி ஸ்டாலின் என்கிற மாலுமியின் தேவை அவசியமாகிறது.
தொலைநோக்கு பார்வையுடன் திமுக அடுத்த தலைவரை தேர்வு செய்து கொண்டது.
ஆலமரம் அழிவதில்லை. அது தன்னுடைய விழுதையே வேராக்கிக் கொண்டு விருச்சமாக நிற்கும்.
உதயநிதியை வாழ்த்துவோம்! வரவேற்போம்!!