மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த ஆலோசனை கூட்டத்தை அவர் நடத்தி இருக்கிறார் என்பது தெரிய வருகிறது .
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த கூட்டத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டும் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது. திமுகவுக்கு உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கட்சியின் தலைவர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதை அடுத்து மாவட்டம் தோறும் திமுக உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து இந்த கூட்டத்தில் மா.செ.,க்களுடன் ஆலோசித்திருக்கிறார் ஸ்டாலின்.
அதன் பின்னர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் . நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பூத் வாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகளுடன் பேச வேண்டும் என்று மா.செ.,க்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். மக்களிடம் திமுக செய்துள்ள பணிகள் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார் ஸ்டாலின்.
மூன்றாம் ஆண்டில் திமுக ஆட்சி அடியெடுத்து வைத்திருக்கும் நேரத்தில், அமைச்சரவை மாற்றம், மா.செ.,க்களுடன் ஆலோசனை என்று அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.