விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு கட்சியில் தலித் அல்லாதவர்களை பாதுகாப்பது எங்களின் கடமை. அதனால் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர் என்ற நூல் வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் திமுகவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. 2026 தேர்தலில் மன்னர் ஆட்சி முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பேசினார். அவருடைய பேச்சு 100 சதவீதம் தவறானது என்று திருமாவளவன் உடனடியாக கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் ஆதவ் அர்ஜூன் பேச்சை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மற்றொரு துணை பொதுச் செயலாளர் ஆனூர் ஷாவ்னாஸ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 30 ஆண்டுகளுக்கு அரசியல் களத்தில் இயங்கி மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்று வரும் திருமாவளவனை முடிவெடுக்க தெரியாதவர் என்றும், திறமை இல்லாதவர் என்றும் இன்னொரு கட்சி தலைவர் விமர்சனம் செய்கிறார். அதை விசிக வின் உண்மை தொண்டன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று விமர்சனம் செய்திருந்தார்.
அதனால் விசிக வில் இருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கப்படுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விசிக தலைவர் திருமாவளவன். அப்போது பேசிய அவர், “விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.புதியதாக அமையும் கூட்டணியில் விசிக இடம் பெறாது; புதிய கூட்டணியில் இடம் பெற வேண்டிய தேவையும் எழவில்லை. விசிக குறிவைக்கப்படுகிறது என்பதைவிட திமுக கூட்டணி குறிவைக்கப்படுகிறது.
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கக்கூடாது, அதனை சிதறடிக்க வேண்டும் என்பது அனைத்து எதிர்க்கட்சிகளின் செயல் திட்டமாக உள்ளது. தொடர் வெற்றியை பெற்று வரும் திமுக கூட்டணி 2026 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடக் கூடாது, அதன் கட்டுக்கோப்பை சீர்குலைக்க வேண்டும் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நினைக்கின்றன. அதற்கு விசிகவை ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என நினைக்கின்றனர். அதற்கு வாய்ப்பில்லை.
கட்சியில் துணை பொதுச் செயலாளர் 10 பேர் உள்ளனர். அதில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சியின் நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை கட்சியின் முன்னனி தோழர்கள் உணர்ந்துள்ளனர். அதனை கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அதுகுறித்து நிர்வாகிகளுடன் பேசியுள்ளேன். விசிக துணை பொதுச் செயலாளர்கள் நிலை வரையிலானவர்கள் மீதான புகார்களில் கட்சியின் உயர்நிலைக் குழு கூடி முடிவு செய்யும். குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பதை உறுதிப் படுத்தியபிறகே நடவடிக்கை என்பது என்பது எங்கள் நடைமுறையாக உள்ளது.
தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் கட்சியில் அதிகார மையத்தில் வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம். கட்சியில் தலித் அல்லாதவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது எங்களின் கடமை. அதன்படி, ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் விரைவில் உயர்நிலைக் குழு கூடி ஆலோசித்து அது தொடர்பான முடிவை விரைவில் அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார். தற்போது விசிக வில் இருந்து ஆதவன் அர்ஜூன் நீக்கம் இல்லை என்பது தெரிகிறது.