‘‘தமிழக அரசியலின் சமகாலச் சூழல் சூரியனுக்கே சுகமாக இருக்கிறது என்பதே நிஜம்’’ என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் பிரமுகருமான மருது அழகுராஜ் கணித்துள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவில், ‘‘அரசியலின் தற்கால நிலவரம் என்னவென்றால் உடைப்பு இல்லாத கட்சிக் கட்டுக்கோப்பு. உருக்குலையாத வலுவான கூட்டணி. சிறுபான்மை மக்களின் சாஸ்வத ஆதரவு. இவற்றோடு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவியருக்கும் மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் போன்றவை புதுமுக வாக்காளர்களை ஈர்த்திருப்பதும் கூடவே பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்குகிற மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம். நூறுநாள் வேலைத்திட்டம் போன்றவை இளையோர் பெண்களை உள்ளடக்கிய ஒரு நிலையான வாக்கு வங்கியை தங்களுக்கென உருவாக்கி தந்திருப்பதாக திமுக திடமாக நம்புகிறது. எனவே
தங்களுக்கு எதிராக வலுவான கூட்டணி அமையாது பார்த்துக் கொண்டாலே மீண்டும் ஆட்சியை தக்கவைத்து விடலாம் என அது யூகிக்கிறது…
ஆனால், திமுகவின் ஆஸ்தான வாக்கு வங்கியாக இருந்து வரும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் திமுக ஆட்சி தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக கொதிநிலையில் இருப்பதும் சட்டம் ஒழுங்கு போதைக் கலாச்சாரம் ஊழல் இவற்றோடு ஆட்சி அதிகாரங்களில் ஆளுங்கட்சியினரது குறுக்கீடுகள் என மாநிலமே அமைதியற்ற ஒரு பதற்றத்தில் இருப்பது திமுகவுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கக் கூடும்.
ஆனாலும், அரசியல் அதிகார கணக்குகளை சிதறடிக்கும்பலம் கூட்டணித் தோரணங்களுக்கு உண்டு.. அதனை கட்டி அமைக்கிற அரசியல் சாணக்யத்தனம். திமுக தலைவர் ஸ்டாலினிடம் இருக்கும் அளவுக்கு எதிரே உள்ளவர்களிடம் இல்லை என்பதால்தை-யில் தடம் பதிக்கும் தமிழக அரசியலின் சமகாலச் சூழல் சூரியனுக்கே சுகமாக இருக்கிறது என்பதே நிஜம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில் அவர், ‘‘தவெக தலைவர் விஜய் தனது கொள்கை வழிகாட்டி பெரியார் என அறிவித்த உடனேயே இருபதாண்டு காலங்களுக்கு மேலாக தனது கொள்கை வழிகாட்டி என்பதாக பெரியாரை வைத்து கதாகலாட்சேபம் செய்து வந்த சீமான் பெரியாரை எதிரி என்கிறார் என்றால் சீமான் எதிர்ப்பது தந்தை பெரியாரையா?
இல்லை தனது அரசியல் பிழைப்பை கபளீகரம் செய்திட களத்திற்கு வந்திருக்கும் விஜய்யையா..?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.