அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 1970களில் திமுகவை எதிர்த்ததில் இருந்து, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் கட்சி தொடங்கினர். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது. அந்த வகையில் நடிகர் விஜய் வெற்றி பெறுவாரா? அவரது ரசிகர் பட்டாளம் வலுவான, விசுவாசமான வாக்காளர் தளமாக மாறுமா?
2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்ட அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. திமுகவிடம் இருந்து அரியணையை தட்டிப்பறிக்க வட்டமடிக்கிறது அதிமுக, பாஜக, விஜயின் த.வெ.க. ஆனால், எத்தனை வட்டமடித்தாலும் திமுக கூட்டணி உடையாது. அதிமுக கூட்டணி வலுவாகாது. அது சாத்தியமில்லை என்பதே அரசியல் வல்லுநர்கள் கருத்து.
இந்த வேளையில், கூட்டணியை தீவிரம் காட்டுகிறது அதிமுக. பாஜகவோடு சேர்ந்ததற்கு சிறுபான்மையினர் வாக்கும் போய்விட்டது. அண்ணாமலையால் பட்டதும் போதும் என நிர்வாகிகள் சொல்ல அதிமுக ரூட்டை மாற்ற, அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்தார் விஜய். முதல் மாநாட்டிலேயே விஜய் தனது அரசியல் எதிரியாக திமுகவை டிக்செய்ததில் அதிமுக குஷி. அதே சூட்டோடு கட்சிகாரர்கள் யாரும் விஜயை விமர்சிக்க வேண்டாம் என அதிரடி உத்தரவை போட்டது அதிமுக தலைமை.
கூட்டணிக்கான கதவு திறந்து இருக்கிறது என விஜய் சொல்ல, வலுவான கூட்டணி என எடப்பாடி சொல்ல அரசியல் களத்தில் சஸ்பென்ஸ் தொடர்கிறது. இதற்கிடையே திமுக எதிர்ப்பில் அதிமுக, விஜய் மேடைகளிலும் பேச்சும் ஒரே டிராக்கில் செல்கிறது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் 200 தொகுதியில் வெற்றி என்ற இறுமாப்பை உடைப்போம்.. 2026 கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என திமுக-வை எச்சரித்தார் விஜய். விஜய் மேடையிலேயே மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என ஓங்கி பேசியிருந்தார் ஆதவ் அர்ஜுனா.
இந்த சூழலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்முறையாக உற்சாகம் மிகுந்து காணப்பட்டது. அதில், நீங்க எதிர்பார்க்கும் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி சொல்ல கரகோஷம் எழுப்பினர் அதிமுகவினர்.
எடப்பாடி பழனிசாமியும் 200 தொகுதியில் வெற்றி என்ற இறுமாப்பு, மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி என்றார். இதெல்லாம் இரு கட்சிகளின் பாதையும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை காட்டுகிறது. ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி என்றபோது அதெல்லாம் இல்லை என்றார் விஜய். தேர்தல் வரட்டும் என்றது அதிமுக.
2011 தேர்தலில் விஜய்காந்தை கூட்டணிக்கு கொண்டுவந்து அமோக வெற்றியை வசமாக்கினார் ஜெயலலிதா. அதே பாணியில் விஜயை கூட்டணிக்கு கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் வலுப்பெற்றுள்ளது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு மேல் இருக்க திமுக எதிர்ப்பில் கட்சிதமாக ஒரே நேர்க்கோட்டசெல்லும் அதிமுகவும், விஜயும் ஒரே கூட்டணியாவார்களா? என்கிற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.