மக்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மசோதா தாக்கல் செய்த போதும் , அதில் கையெழுத்து போடாமல் தாமதிப்பது எந்த விதத்தில் நியாயம் எனக்கு கேள்வி எழுப்பிய சீமான் , அறிஞர் அண்ணா சொன்னது போல நமக்கு ஆளுநரே வேண்டாம் என்பது தான் தங்களுடைய நிலைபாடு என்றார்.
சேலம் நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் என்றால் மற்ற ஆவணங்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்பிய சீமான், கடந்த 9 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் எதுவும் சரியாக நடக்கவில்லை , எல்லாம் தனியாருக்கு எடுத்து தாரை வார்த்து வருகின்றனர்.
நாட்டில் மக்களை எப்பவுமே பதட்டத்தில் தான் வைத்துள்ளனர். நீட் எழுது, சிஐஏ , என்ஐஏ என எல்லாம் கொண்டு வந்து மக்களை பதட்டம் செய்வது , ஆதாரில் எல்லாம் இணைத்துவிடு என்கின்றனர். எல்லாம் ஆதார் என்றால் குடியுரிமை சான்றிதழ் எதற்கு என்ற கேள்வி எழுப்பிய அவர், பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் இது சரியாக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸில் பயங்கரவாதிகள் உள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு நாட்டில் உள்ள அனைத்து பயங்கரவாதிகளும்
ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவில் தான் இருக்கிறார்கள். அப்படி பார்த்தால்
காங்கிரஸ் ஒன்றும் பாஜகவை ஆதரிக்கவில்லையே என்றார்.
காசியில் தமிழ் குறித்து பேசிய கேள்விக்கு பதிலளித்த சீமான், மோடி தமிழில் திருக்குறள் சொல்கிறார், தமிழில் பேசுகிறார் என கருதி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது என எச்சரிக்கை செய்த சீமான், நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வரவில்லை. தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை, பிறகு எப்படி தமிழை வளர்ப்பார்கள் என்றார் அவர்.
கோழிக்கு அதன் பாசையில் பேசி இறை போட்டு பிடித்து , பின்னர் அதை அறுத்து வறுப்பது போல தமிழ் மொழியில் பேசி பாஜக வினர் தமிழக மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என்றார்.
தமிழ்நாட்டில் ஆளுங் கட்சிகள் வேண்டுமானால் மாறலாம், இலவசங்களோ ஊழலோ மாறுவதில்லை. தேர்தல் நேரத்தில் மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்படும் என்று கூறிய தமிழக அரசு தற்போது ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை என்றார்.
ஏழு பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு மேல்முறையீடு செய்தால் , அதற்கும் மேல் நாங்கள் செல்வோம் எங்களுக்கும் சட்டப் போராட்டம் தெரியும் என்றார்.
நாட்டில் பெரிய கட்சி என்று கூறி வரும் பாஜக, 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி போல் , பாஜக தனித்துப் போட்டியிட தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு, பாஜக அரசு , கண்ணுக்கு தெரியாத இடத்திலோ , அல்லது கடலிலோ எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி விட்டு , பின்னர் அதனை அப்படியே நகர்த்திக் கொண்டு வந்து மதுரையில் வைத்து விடுவார்களோ என தோன்றுகிறது என கிண்டலடித்தார்.