நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ண உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள பாரதீய ஜனதா மற்றும் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகங்களில் தேர்தல் வெற்றியை கொண்டாட தயாராகி வருகின்றன.
543 – தொகுதிகளை கொண்ட நாடாளுமன்ற மக்களவைக்கு 7-கட்டங்களாக தேர்தல் நடைப்பெற்றது. இறுதிகட்ட வாக்குப் பதிவானது கடந்த ஜூன் 1-ம் தேதி நடந்த நிலையில் வெளியாகி உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு சாதகமானதாக உள்ளது.
பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று வெளியான கருத்துக் கணிப்புகள் உண்மையானவை இல்லை என்றும் உண்மையான வெற்றி என்பது தங்களுக்கு தான் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 295 – தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள்.
ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் பரஸ்பரம் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கு இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருவது ஒரு புறம் என்றால் தேர்தலில் வெற்றி பெற போவது நாங்கள் தான் என்று கூறி கொண்டு தேர்தல் வெற்றியை கொண்டாட ஆளும் பாரதீய ஜனதா கட்சியும் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகின்றன.
தலைநகர் டெல்லியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நாளைய தேர்தல் வெற்றியை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பலவித உணவுகள் மற்றும் பலவகை இனிப்புகள் பரிமாறவும் ஏற்பாடுகள் அங்கு நடக்கிறது.
இது ஒரு புறம் என்றால் தங்கள் அணியின் வெற்றியை கொண்டாடுவதற்கு காங்கிரஸ் கட்சியும் தன்னை தயார்படுத்தி கொண்டு வருகிறது. டெல்லியின் பிரான சாலையான நம்பர் – 24 அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. டெல்லியில் தற்போது வெயில் காலம் என்பதால் அனலின் தாக்கத்தில் இருந்து கொண்டாட்டத்தில் பங்கு பெற வரும் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை காக்க ராட்சச Air Cooler வசதியுடன் டெண்டுகள் அமைக்கப்படுகின்றன.
ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் நாங்கள் தான் ஆட்சி அமைக்க போகிறோம் என்று ஒருவருக்கொருவர் கூறினாலும் உண்மையான வெற்றி யாருக்கு கிடைக்கப் போகிறது என்பதை மக்கள் அளித்துள்ள வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகளை திறந்து எண்ணும் போது தான் தெரிய வரும். அதற்காக நாளை வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.