அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, அவர் மாநிலத்திற்கு உண்மையாக இல்லை, கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கின்றார் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் நேற்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தென்னிந்தியா மற்றும் ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பெங்களூர் செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “தொகுதி மறுவரையறை தொடர்பாக அண்ணாமலை சொன்னது முக்கியமில்லை. பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த நாட்டிற்கு என்ன சொன்னார்கள் என்பது தான் முக்கியம்.
அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, கட்சி அவருக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்கிறார். அவர் மாநிலத்திற்கு உண்மையாக இல்லை, அவர் கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கின்றார், அவர் வேலையை செய்யட்டும்.

நாடாளுமன்ற தொகுதிகளை விட மாநில சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது குறித்து ரேவந்த் ரெட்டி பேசி இருக்கின்றார். முதலில் நமது ஒருங்கிணைந்த குரலை வலுவானதாக்குவோம். அதன் பிறகு நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசலாம்” என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.