சீமானின் மோசமான நிர்வாக திறமையால், நாம் தமிழர் கட்சி அழிந்து வருகிறது . கட்சியில் உள்ளவர்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் தனது சொந்த வாழ்க்கைக்காக சுரண்டியவர் சீமான். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய வெற்றி குமரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
பின்னா் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒருவராக இருந்த வெற்றிக்குமரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது – சீமானின் மோசமான நிர்வாக திறமையால் ஆட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய நாம் தமிழர் கட்சி, இப்போது அதனை இழந்து இருக்கிறது என்றார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் அக்கட்சியில் இருந்த விலகும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் ஒரே கட்சியாக பணியாற்ற உள்ளதாகவும் இந்தப் பயணம் அதிகாரத்தை நோக்கிய பயணம் என்றும் வெற்றிக்குமரன் கூறினார். சீமானிடம் நிர்வாக திறன் அறவே இல்லை என தெரிவித்த அவர், எப்போதுமே பேசு பொருளாக தாம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் மனநோய் சீமானுக்கு உள்ளதென சாடினார். 20-க்கும் மேற்பட்ட வாக்கு விழுகாட்டில் இருக்க வேண்டிய கட்சி, எட்டு சதவீதம் வாக்குகளை பெற்றிருப்பதே தோல்விதான் என்று வெற்றிக்குமரன் குறிப்பிட்டார்.
கட்சியில் உள்ளவர்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் சுரண்டி தனது சொந்த வாழ்க்கைக்காக பயன்படுத்திக் கொண்டவர் சீமான் என்றும் தான் என்ற அகங்காரம் அவருக்கு உள்ளது என்றும் அவர் குறை கூறினார். வெல்லப்போற கட்சித் தலைவருக்கான தகுதி சீமானிடம் இல்லை என்று குறிப்பிட்ட வெற்றி, தைரியமான ஆளாக சீமான் இருந்தால், தங்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளியிட வேண்டும் என அவர் சவால் விடுத்தார்.
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து விட்டு வந்த பிறகு சீமானின் நிலைப்பாடு மாறி உள்ளது என வெற்றிக்குமரன் கூறினார். ஹெச்.ராஜாவை பேரறிஞர் என்று கூறி இருப்பதன் மூலமாகவே அவர் யாரின் பின்புறத்தில் இயங்கி வருகிறார் என அறிந்து கொள்ளலாம் என்று பேசிய வெற்றிக்குமரன், சீமான் யாரின் பின்புலத்தில் செயல்படுகிறார் என விரைவில் ஆதாரப்பூர்வமாக வெளிவரும் என்றார். பெரியாரை நாங்கள் எதிர்க்கும் நிலைப்பாட்டில் இல்லை என்றும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடனான சந்திப்பை, சீமான் மிகைப்படுத்தியது, தற்போது தெரிய வந்துள்ளதாகவும் வெற்றிக்குமரன் தெரிவித்தார்.
‘ஆட்சியாளர்களின் பொய்வேடம் வெகுவிரைவில் கலையும்…’ திமுக மீது விஜய் குற்றச்சாட்டு..!