நடிகை விஜயலட்சுமி எழுதி கொடுத்த வாபஸ் மனு செல்லுபடி ஆகுமா? சட்ட வல்லுனர்களுடன்போலீசார் ஆலோசனை!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி மோசம் செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடிகை விஜயலட்சுமி கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதேபோல் கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சீமானுக்கும் விஜயலட்சுமி சமரசம் ஏற்பட்டு, விஜயலட்சுமி சீமான் மீது நடவடிக்கை வேண்டாம் என எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.
12 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் அதே புகாரை சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்திருப்பதால் காவல் துறை உயரதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பின்னர் கோயம்பேடு மாவட்ட காவல் துணை ஆணையர் உமையாள், நடிகை விஜயலட்சுமியை வரவழைத்து இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விஜயலட்சுமியை வளசரவாக்கம் போலீசார் ஆஜர் படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதியிடம் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார்.
பின்பு நீதிமன்ற உத்தரவுபடி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமிக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.
இதற்கிடையில் விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். கடந்த 12ஆம் தேதி ஆஜராவதாக சொல்லி இருந்த சீமான் பல்வேறு அலுவல் காரணமாக வர முடியவில்லை என வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இது மட்டுமின்றி நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக காவல்துறை சில ஆவணங்களை தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இரண்டாவது முறையாகச் நேற்று முன்தினம் வளசரவாக்கம் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தனர். முதலில் வாங்க மறுத்து பின்னர் சம்மனை சீமான் வாங்கிக் கொண்டார். 18ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதாக உறுதியளித்திருந்தார்.
சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில், சீமான் விசாரணைக்கு ஆஜராவார். அதே நேரத்தில் அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்த விஜயலட்சுமி அவருக்கு ஆதரவாக செயல்படும் வீரலட்சுமி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும். மூன்று பேரையும் ஒரே நேரத்தில் வரவழைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு இடையில் நேற்று இரவு நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையம் சென்று சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு நான் பெங்களூர் செல்கிறேன் என கூறி சென்றுள்ளார். ஆனால் அப்போது காவல் நிலையத்தில் உதவி ஆணையரோ, ஆய்வாளரோ இல்லை. நீதிமன்ற வழிகாட்டுதல் படி விசாரணை நடைபெறுவதால், நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்த மனு செல்லுபடி யாகாது என கூறப்படுகிறது.
இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கும் வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதல்படி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் மீது புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்து அந்த விவகாரம் பரபரப்பானது. பின்னர் சமரசம் ஏற்பட்டு விட்டது எனக் கூறி எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீமான் மீது அதே புகாரை தெரிவித்த நடிகை விஜயலட்சுமி நீதிமன்ற நேரத்தையும் காவல்துறையின் நேரத்தையும் வீணடித்துள்ளார். எனவே அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்..