மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? என விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
விஜய்,இதுகுறித்து தனது அறிக்கையில், ”மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது.பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்” என விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
விஜயின் எதிர்ப்புக்கு பதிலடி கொடுதுள்ள பாஜக நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன்,”தம்பி விஜயிடம் நான் ஒன்று கேட்கிறேன். நான் தெலுங்கானா ஆளுநராக இருக்கும்போது தெலுங்கில் அவரது படங்கள் வெளியானது. ஹிந்தியில் ரிலீஸ் ஆனது. அப்படியானால் முன்மொழிக் கொள்கை பலமொழிக் கொள்கை உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் இருக்கலாம். ஆனால் மும்மொழி கொள்கையை குழந்தைகளின் அறிவாற்றலை வளர்ப்பதில் இருக்கக் கூடாதா? இனிமேல் தமிழில் மட்டும் தான் எனது படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்வீர்களா?
ஏனென்றால் நான் தமிழன். நான் தமிழை போற்றுபவன். தெலுங்கில் எல்லாம் என் படம் ரிலீஸ் ஆகக் கூடாது. ரிலீஸ் ஆனால் நான் எதிர்ப்பேன் என்று சொன்னீர்களா? சொல்வீர்களா? அப்படியானால் பலமொழிக் கொள்கை உங்களுக்கு தேவைப்படுகிறது. குழந்தைகளின் வருங்கால அறிவாற்றலுக்கு மும்மொழிக் கொள்கை தேவைப்படுகிறது. இதில் எல்லாம் நீங்கள் கருத்து சொல்லாதீங்க தம்பி. நீங்கள் சொன்னால் சரியாக இருக்காது.
உங்களது தெலுங்கு ரசிகர்கள் இப்போது என்ன சொல்வார்கள்? வாய்ப்புகளை அரசாங்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொடுங்கள். சாமனிய ஒரு குழந்தை தமிழைத் தாண்டி, ஆங்கிலத்தை தாண்டி, கர்நாடகாவில் ஒரு வேலை வாய்ப்பு இருகிறது. கன்னடம் கற்றுக் கொண்டால் அந்த வேலை இந்த குழந்தைக்கு கிடைக்கும். தெலுங்கானாவில் ஒரு வேலை வாய்ப்பு இருக்கிறது. தெலுங்கை கற்றுக் கொண்டால் அந்த குழந்தைக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை வாய்ப்பு மற்ற குழந்தைகளுக்கு, சாமானிய மக்களுக்கு, ஏழை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதற்கு ஒரு மொழியை கற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. கற்றுக் கொடுப்பதற்கு கல்வித் துறை இருக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சனை?” என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.