ஒருவருக்கு குரு என்பவர் அவசியமா? குரு – சிஷியன் உறவு முறை எப்படி இருக்க வேண்டும்?
என். கே. மூர்த்தி பதில்கள்
குழந்தை பருவத்தில் ஆரம்ப பாடத்தை கற்றுக் கொடுப்பதைத் தாண்டி குரு என்பவரின் தேவை அவசியமில்லை. உலகம் முழுவதும் ஏராளமான குருக்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களால் சமுதாயம் அடைந்த மாற்றம் என்ன? இன்னும் சொல்லப்போனால் இந்த உலகம் இந்தளவிற்கு மோசமாக இருப்பதற்கு “குரு” வழிபாட்டு முறையும் ஒரு காரணம்.
இந்துக்களின் புனித நூல் என்று போற்றப்படும் பகவத்கீதையில் துரோணர் ராஜகுரு. அவரிடம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் வித்தை கற்றுவந்தனர். மாபெரும் வில்வித்தை வீரரான அர்ஜூனனும் துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தார்.
ஏகலைவனுக்கு துரோணரின் சீடனாக வேண்டும் என்பது விருப்பம். துரோணர் ஒரு பிராமணர். ஏகலைவன் ஒரு சூத்திரன், தீண்டத்தகாதவன் என்று அவரை துரோணர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆனால் ஏகலைவன் அழகான உடல் அமைப்பை கொண்டிருந்தார். இப்படிப்பட்ட மனிதர் உலகில் முதன்மையான வில்வித்தை வீரனாக வரமுடியும் என்பதை துரோணர் அறிந்திருந்தார்.
ஏகலைவனின் நடை, அவருடைய பேச்சுன் தன்மை, முகத்தின் அமைப்பு என்று எல்லாவற்றையும் உற்று கவனித்த துரோணர், இந்த இளைஞன் மிகப்பெரிய வில் வித்தை வீரனாக உருவாகுவான் என்பதை கண்டுக்கொண்டார். அப்படியானால் என் சீடன் அர்ஜூனனின் கதி என்னாவது? அரசனாகப் போகிறவரின் நிலை! அதனால் ஏகலைவனை முற்றிலும் புறக்கணித்தார்.
நீ சூத்திரன், நான் பிராமணன். நான் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் துரோணர். சூத்திரனின் நிழல் கூட ஏற்கமுடியாது. தவறி நிழல் தங்கள் மீது பட்டுவிட்டால் பிராமணர்கள் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஏகலைவன் காட்டிற்குள் சென்றார். வில்வித்தையின் மீது இருந்த அதீத ஈடுபாட்டினால், துரோணரின் சிலையை வடித்து, அதன் முன்னே வில்வித்தையை பழகத் தொடங்கினார். துரோணரின் வழிகாட்டுதல் இல்லாமல், நேரடி ஆலோசனை இல்லாமல் தனியாகவே ஏகலைவன் முன்னேறி வருகிறார் என்ற செய்தி துரோணருக்கு எட்டியது. ஏகலைவனின் முழு ஈடுபாட்டினாலும் திறமையினாலும் மாபெரும் வீரனாக வளர்ந்து நின்றார்.
அர்ஜூனன், ஏகலைவனுக்கு இணையான வீரன் இல்லை என்ற செய்தி துரோணருக்கு கிடைத்தது. ஏகலைவன் தனித்துவம் மிக்க வீரனாக, யாராலையும் வெல்ல முடியாத வீரனாக உயர்ந்து நிற்கின்றார்.
துரோணர், ஏகலைவனை பார்க்க சென்றார். மானசீக குருவை கண்டதும் ஏகலைவன் அகம் மகிழ்ந்தார். குருவின் முன் தான் கற்றுக் கொண்ட வித்தைகளை காட்டினார். ஏகலைவனின் வித்தைகளைக் கண்டு துரோணர் அதிர்ந்து போனார். ஏகலைவன், அர்ஜூனன் உட்பட தன்னுடைய அனைத்து சீடர்களையும் விஞ்சிவிட்டார். உண்மையில் துரோணரையே விஞ்சிநின்றார்.
துரோணர்,” நீ என் சிலையை வைத்துக் கற்றுக் கொண்டாய், இப்போது நீ எனக்கு குரு தட்சணை தரவேண்டும் என்றார்”. சீடன் குருவிற்கு நன்றிக் கடனாக ஏதாவது பரிசு தரவேண்டும். ஆனால் ஏகலைவனிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை. அழத் தொடங்கினான். என்னிடம் ஏதும் இல்லை. ஆனால் நீங்கள் எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தான்.
துரோணர், ஏகலைவனின் வலது கை கட்டை விரலை தட்சணையாக கேட்டார். அடுத்த நொடியே தனது கட்டைவிரலை வெட்டி துரோணருக்கு சமர்ப்பித்தான். துரோணர் வலது கை கட்டைவிரலை கேட்க வேண்டிய காரணம் என்ன? அந்த விரல் இல்லாமல் இனி எப்போதும் வில் வித்தையில் ஈடுபட முடியாது.
துரோணர் என்ன மாதிரியான குரு? நிச்சயமாக இவர் குருவாக இருப்பதற்கு சிறிதும் தகுதி இல்லாதவர். “நீ ஒரு சூத்திரன் என்பதால் சீடனாக ஏற்பதற்கில்லை” என்று அவர் சொல்வது ஒரு கீழ்தரமான புத்தி துரோணரிடம் இருப்பதை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட மனநிலை பேர்வழிகளால் தான் மக்களின் மனம் துண்டுத்துண்டாக சிதறி இருக்கிறது. குரு என்ற வார்த்தைக்கு சிறிதும் தகுதி இல்லாதவர் துரோணர்.
ஆனால் ஏகலைவன் எவ்வளவு பெரிய மனிதனாக உயர்ந்து நிற்கிறார். இதுபோன்ற மனிதர் பிறப்பதே அரிது. ஏகலைவன் எதுவும் சொல்லவில்லை. நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லையே என்று சொல்லி இருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. அப்படி ஒரு யோசனையே ஏகலைவன் மனதில் எழவில்லை. மறுக்கப்பட்டாலும் துரோணரை தான் குருவாக நம்பினான், ஏற்றுக்கொண்டான். தனது வலது கை கட்டவிரலை கொடுத்து வாழ்நாள் முடமானான். ஒரு மாபெரும் வில்வித்தை வீரனை குரு அழித்து விட்டார்.
உலகத்தை கெடுத்து நாசமாக்குவதே “குரு” என்ற முறைதான்.
உங்களுக்கு என்ன தேவை என்பதை இன்னொருவருக்கு எப்படி தெரியும்? உங்களுக்கு உங்களால் உதவி செய்துக் கொள்ள முடியவில்லை என்றால் உங்கள் தேவையை (குருவால்) மற்றவர் எப்படி பூர்த்தி செய்யமுடியும்?
உங்கள் யோக்கியதைக்கு ஏற்றார்போல் அரசாங்கத்தை தேர்வு செய்கிறீர்கள். உங்கள் யோக்கியதைக்கு ஏற்றார்போல் உங்கள் வாழ்க்கை அமைகிறது. உங்களுக்கு காசு பணம் முக்கியம் என்றால் அதற்கு ஏற்ற நட்பை தேடிக்கொள்கிறீர்கள். உங்களுக்கு சுகபோகம்தான் பிரதானம் என்றால் அதற்கேற்ற நண்பர்கள் வட்டம் அமைத்து கொள்கிறீர்கள்.
உங்களுக்கு ஒழுக்கம், நேர்மை வேண்டும் என்று விரும்பினால் அதற்கு ஏற்ற உயர்ந்த மனிதர் கிடைப்பார். உங்களுக்கு ஒழுக்கம் முக்கியம் என்றால் முதலில் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை அறிந்து கோள்ள வேண்டும். ஒழுக்கத்தை அறிதல் என்பது தன்னை அறிதல். தன்னை அறிந்தவன் முற்றும் அறிந்தவனாகிறான். அதனால் குரு என்று ஒருவர் தேவையில்லை.
அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம். வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்வி- பதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது. மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும். உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 91765 41031 |