எஸ்.ராஜேந்திரன் – சென்னை
கேள்வி-வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் என்ன?
பதில் – ஒரு சிற்பி கல்லுல சிலை உடைக்கிறார், கல்லு உடைந்து விடுகிறது.
இரண்டாவது ஒரு கல்லை எடுத்து உடைக்கிறார். அதுவும் உடைந்து வீணாகிவிடுகிறது.
மூன்றாவது ஒரு கல்லை எடுத்து உடைக்கும் போது சிலையாகிறது. அது எல்லோரும் வணங்குவதற்கு தகுதியானதாக மாறிவிடுகிறது. முதல்ல உடைப்பட்டுபோன இரண்டு கல்லும் கால்ல மிதிப்படுகிறது.
அய்யா ராஜேந்திரன் அவர்களே, சில சோதனைகளை, சில வலிகளை தாங்கியவர்கள் மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். அதனால் உங்களுக்கு வந்திருக்கக் கூடிய சோதனை தற்காலிகமானதுதான். கவலப்பட வேண்டாம்.
உமாதேவி – காரணோடை
கேள்வி : விழிப்புணர்வு என்றால் என்ன?
விழிப்புணர்வு என்பது இந்த உலகத்திற்கும் நமக்கு உள்ள தொடர்பை, உறவை நுட்பமாக அறிந்துக் கொள்வது.
நாம் யார் ? நமக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள உறவு என்ன? இந்த உலகத்தில் நாம் யாருடன் உறவு வைத்திருக்கிறோம் ? அந்த உறவை அளவோடு வைத்திருக்கிறோமா? எப்படி வைத்திருக்கிறோம் என்பதை நுட்பமாக அறிந்து கொள்வது தான் விழிப்புணர்வு.
1 மக்களோடு உறவு வைத்திருக்கிறோம் அந்த மக்களிடம் இருந்து உற்பத்தியாகின்ற ( சாதி,மதம்,கடவுள், கொள்கை ) போன்ற கருத்துகளோடு உறவு வைத்திருக்கிறோம். மூன்றாவதாக மனிதன் உற்பத்தி செய்கின்ற பொருட்களோடு உறவு வைத்திருக்கிறோம். இதுதான் நமது முழுமையான உறவுகள்.
இந்த உறவுகளை நாம் எப்படி அனுகுகிறோம், எப்படி எதிர்கொள்கிறோம்? அதனை பொருத்தே நமது வாழ்க்கை அமைகிறது.
மனிதனுக்கு சகமனிதனால் ஏற்படும் ஆபத்தை விட அவன் கருத்தால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.
தாட்சாயினி- ஆவடி
கேள்வி- நீங்கள் திமுக ஆதரவாளரா இருந்தும் அரசுக்கு எதிரா எழுத காரணம் என்ன?
பதில்- கிரிக்கெட் போட்டியில் நடுவராக இருப்பவர், அவர் நாட்டு வீரர்கள் “அவுட் ஆனால் அவுட்” கொடுக்கவில்லையா ? அடுத்த நாட்டு வீரர்கள் சிக்ஸ் அடித்தால் நான்கு ரன்’னா கொடுக்க முடியும்?
நான் ஒரு பத்திரிகையாளன், மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை கொண்டு வரும் அரசை நான் முழுமையாக வரவேற்கிறேன். அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம். மிகவும் அற்புதமான புரட்சிகரமான திட்டம். அதனை வரவேற்று எழுதினேன். அதேபோன்று அவர்களின் செயல்பாடு மக்களுக்கு எதிராக இருக்கிறது என்றால் அதனை சுட்டி காட்டுகிறேன். இதில் தவறு இருப்பதாக கருதவில்லை.
கருணா- திருத்தணி
கேள்வி – சிலர் எப்பொழுதும் கவலைப் பட்டுக் கொண்டே இருப்பது ஏன்?
பதில் – சொர்க்கம், நரகம் என்பதை நேரில் யாரும் பார்த்தது இல்லை. ஆனால் சிலர் பயத்தோடும், கவலையோடும் இருக்கிறார் என்றால் அவர்கள் வாழும்போதே நரகத்தில் வாழ்கிறார்கள் என்பதை முடிவு செய்துகொள்ளலாம். கவலையும், பயத்தையும் தூக்கி போட்டுவிட்டு துணிந்து செயல்படுகிறவர்களுக்குதான் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
அமீர் – திருநின்றவூர்
கேள்வி – ராகுல் காந்தியை பாஜக அரசு விரட்டிக் கொண்டே இருக்கிறதே?
பதில் – ராகுல் காந்தி 100 நாள் நடை பயணத்திற்கு பின்னர் பக்குவப்பட்ட மனிதராக மாறிவிட்டார். இந்தியாவில் பெரும்பான்மையான இதயங்களில் இடம் பிடித்து விட்டார். அவருடைய கொள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு, பாட்டி இந்திராகாந்தி, தந்தை ராஜீவ்காந்தியை விட ராகுல் காந்தி மாபெரும் சக்தியாக உயர்ந்து நிற்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அதனால் ராகுல் காந்திக்கு தொல்லை கொடுக்கிறார்கள். அவர் அதில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ராஜன் – அம்பத்தூர்
கேள்வி- அதிமுக வினர் எடப்பாடி பழனிச்சாமி காலிலும் விழத் தொடங்கிவிட்டார்களே?
பதில் – ஜெயலலிதா இறந்த பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார்கள். இடையில் சின்னம்மா சசிகலாவின் “கால்” கிடைத்தது. அதுவும் சிறிது நாட்கள் தான் நீடித்தது. அவரும் சிறைக்கு சென்றுவிட்டார். என்ன செய்வதென்று புரியவில்லை.
விழுவதற்கு ஒரு கால் கிடைக்காமல் அவர்கள் எவ்வளவு நாள் காத்திருந்தார்கள் தெரியுமா? அந்த வலியும் வேதனையும் உங்களுக்கு எப்படி புரியும். இப்பொழுது தான் எடப்பாடி பழனிசாமியின் கால் கிடைத்திருக்கிறது. அதற்குள் இப்படி கேட்டால் எப்படி சார் ?
மாதேஷ் – ரெட்டில்ஸ்
கேள்வி – இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களில் உங்களுக்கு பிடித்த பிரதமர் யார் ?
பதில் – சந்தேகமே வேண்டாம், வி.பி.சிங் தான். 1989-90 காலக்கட்டத்தில் 11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தவர். இன்று பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட நமது பிள்ளைகள் பட்டப் படிப்பு முடிப்பதற்கும், அவர்கள் அரசுப் பதவியில் அமர்வதற்கும் முக்கிய காரணமாக இருப்பவர். அவர்காலத்தில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது மிகப்பெரிய சாதனை. அவரைப் போல் ஒரு பிரதமர் இனிமேல் இந்தியாவிற்கு கிடைக்க மாட்டார்கள்.
பலராமன் – சங்கராபுரம்
கேள்வி – கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் நேர்மையானவர் யார்-?
பதில் – கம்யூனிஸ்டு கட்சியில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் நேர்மையானவர்கள். அவர்களின் நேர்மையில் குறை சொல்வதற்கு மற்ற கட்சியில் ஒருவருக்கும் தகுதி இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜாவிற்கு சொந்த வீடு கூட இல்லை என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
ஜான்- ஆவடி
கேள்வி – 12 மணி நேரம் வேலை என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்களே ?
பதில் – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டுவரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. தொழிலாளர்களின் உரிமையை பறித்துள்ளார்கள்.
தொழிலாளர்களின் 8 மணி நேரம் வேலை என்பது பல உயிர் தியாகம் செய்து பெறப்பட்ட உரிமை.
ஆசியாவிலேயே கடந்த 1936-ம் ஆண்டு ஜூலை 30-ம் நாள் 8 மணி நேர வேலை, உழைப்புக்கு ஏற்ற ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு பேறு கால விடுப்பு வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரெஞ்சு ராணுவம், தொழிலாளர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் வீர மரணமடைந்தனர்.
இதைக் கண்டித்து, பிரான்சில் இருந்த பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பிரெஞ்சு நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினை எதிரொலித்ததையடுத்து 1937-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் புதுச்சேரி தொழிலாளர்களுக்கான எட்டு மணி நேர வேலை உரிமை சட்டமும், தொழிற்சங்கம் உரிமை சட்டமும் நிறைவேற்றப்பட்டது.
அப்படிப் பெறப்பட்ட சட்டத்தை மாற்றி 12 மணி நேரம் வேலை என்பது சரியான அணுகுமுறை அல்ல. இதனை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் இறங்கும்.
சங்கரபாண்டி – மதுரை
கேள்வி – 2024 நாடாளுமன்ற தேர்தல் எப்படி இருக்கும் ?
பதில் – எதிர் கட்சிகளின் ஒற்றுமை உறுதியாகாதவரை சந்தேகமே வேண்டாம். மீண்டும் மோடி தான் பிரதமர்.